முருங்கைக் கீரை குழம்பு

murungai keerai kulambu
- Advertisement -

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் வாரத்திற்கு மூன்று முறையாவது ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அதிலும் இரும்புச்சத்து மிகவும் அதிகமாக இருக்கக்கூடிய கீரையாக முருங்கைக்கீரை திகழ்கிறது. இந்த முருங்கைக் கீரையை வைத்து எப்படி குழம்பு செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முருங்கைக்கீரையை உருவுவது மிகவும் கடினம் என்பதால் பலரும் இந்தக் கீரையை செய்வதில்லை. ஆனால் பல மருத்துவ குணம் நிறைந்த இந்தக் கீரையை நாம் வாரத்தில் ஒருமுறையாவது உட்கொண்டோம் என்றால் உடலில் பலவித நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. முருங்கைக் கீரையை பொரியலாக செய்து சாப்பிடுவதை விட இப்படி குழம்பாக செய்யும் பொழுது கீரையை ஒதுக்காமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்பார்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு – 150 கிராம்
  • முருங்கைக்கீரை – ஒரு கட்டு
  • பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் – ஒரு மூடி
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  • வர மிளகாய் – 10
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 20
  • பூண்டு – 3 பல்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • புளி – எலுமிச்சை அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு மற்றும் பச்சரிசியை ஐந்து நிமிடம் மிதமான தீயில் வறுத்து, ஆறவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் துருவி அதனுடன் மிளகு, சீரகம், வர மிளகாய் 8 இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கியதும் அதில் கருவேப்பிலை மற்றும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாடை நீங்கிய பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளியையும் ஊற்ற வேண்டும். புளியின் பச்சை வாடை நீங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை அதில் சேர்த்து கீரை நன்றாக வேகும் அளவு வதக்க வேண்டும். கீரை நன்றாக வெந்த பிறகு அதில் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பை அணைத்து விட வேண்டும். மிகவும் ருசியான பாரம்பரியமான முருங்கை கீரை குழம்பு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: அன்னாச்சி பழ அல்வா

நம் முன்னோர்கள் செய்த இந்த குழம்பை நாமும் செய்து நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

- Advertisement -