முருங்கைக் கீரை துவையல் செய்முறை

thuvaiyal
- Advertisement -

கீரைகளை நாம் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு இரும்புச்சத்து என்பது அதிகமான அளவு கிடைக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து இருந்தாலும் வீட்டில் இருக்கும் நபர்கள் கீரையை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக கீரையை வைத்து துவையல் செய்து கொடுக்கலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் முருங்கைக் கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் முருங்கைக்கீரை தினமும் நாம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு பல நோய்களின் தாக்குதலில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை நாம் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து தரும் பொழுது பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்காகவே துவையல் செய்யும் முறையை பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கடுகு – 1 1/2 ஸ்பூன்
  • மல்லி – 1 ஸ்பூன்
  • மிளகு – 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 7
  • பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
  • புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சீரகம், மல்லி, மிளகு, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வெந்தயம் சிவக்கும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். வெந்தயம் சிவக்க ஆரம்பித்ததும் அதில் கடுகு ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

இதையும் தனியாக எடுத்த ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சிறிது எண்ணெய் ஊற்றி முருங்கைக் கீரையை போட்டு நன்றாக வதக்க வேண்டும். முருங்கைக்கீரை நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அதையும் எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை தவிர்த்து மற்ற அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் ஊற வைத்திருக்கும் புளியை சேர்த்து அதனுடன் முருங்கைக் கீரையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக வெடித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை அதில் சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கழுவி அதனுடன் ஊற்ற வேண்டும்.

தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் பிரியும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். அடிக்கடி கரண்டியை வைத்து கீரையை கிண்டி விட வேண்டும். நன்றாக சுருள வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவேண்டும். அவ்வளவுதான் முருங்கைக் கீரை துவையல் தயாராகிவிட்டது. இதை அனைத்து விதமான வெரைட்டி ரைஸ்களுக்கும் பயன்படுத்தலாம். இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: அடுப்பிலா ஆப்பிள் பீடா இனிப்பு செய்முறை

சாதாரண புதினா கொத்தமல்லி துவையல் போலவே இந்த முருங்கைக் கீரை துவையலையும் நாம் பயன்படுத்துவதன் மூலம் முருங்கைக் கீரையின் நன்மைகள் அனைத்தையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -