முருங்கைக்காய் தொக்கு செய்முறை

murungaikai gravy
- Advertisement -

ஒவ்வொரு காய்கறிகளும் பழங்களும் அதன் பருவ காலத்திற்கு ஏற்றவாறு அதிக அளவில் கிடைக்கும். அப்படி பருவ காலம் ஏற்படும்பொழுது அந்த காய்கறிகளையும் பழங்களையும் நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறும். பழங்களை நம்மால் பதப்படுத்த முடியாது. ஆனால் காய்கறிகளை தொக்காகவும், ஊறுகாயாகவும் நாம் பதப்படுத்தி வைத்துக் கொண்டோம் என்றால் அதை பல நாட்கள் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் முருங்கைக்காயை வைத்து எப்படி தொக்கு செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முருங்கைக்காயில் அதிக அளவு விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து என்று பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. முருங்கைக்காயை நாம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை எதுவும் ஏற்படாது. அதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல வலுமை தருவதாகவும், சிறுநீரகத்தை பலப்படுத்தக்கூடியதாகவும், தாது உற்பத்தியை அதிகரிக்க கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய் – 1/2 கிலோ
  • வெந்தயம் – 1 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • முழு பூண்டு – 2
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
  • புளி – ஒரு கோலிகுண்ட அளவு
  • வெல்லம் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் முருங்கைக்காயை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு உள்ளங்கை அளவிற்கு நீளத்தில் நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும். வெந்தயம் லேசாக சிவந்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் கடுகையும் சேர்த்து கடுகு நன்றாக பொரியும் வரை விட்டுவிட்டு அதை எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வெந்தயமும் கடுகும் ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காய் 15 நிமிடம் வெந்த பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் ஆரிய பிறகு முருங்கைக்காயை இரண்டாகப் பிளந்து ஒரு ஸ்பூனை வைத்து அதற்குள் இருக்கும் சதை பகுதிகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி அனைத்து முருங்கைக்காயில் இருக்கும் சதைப்பகுதியை எடுத்த பிறகு இந்த சதை பகுதியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் இரண்டு சுற்று மட்டும் விட்டு எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன் போட்டு இவை இரண்டும் நன்றாக பொரிந்த பிறகு அதில் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். பிறகு பூண்டை தோல் நீக்கி நன்றாக இடித்து அதை கடாயில் போட்டு நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பூண்டின் நிறம் நன்றாக மாறிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் முருங்கைக்காயையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டும் முருங்கை காயும் நன்றாக கலந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடி இவற்றை சேர்த்து மிளகாய்த்தூள் வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும்.

ஊற வைத்திருக்கும் புளியை நன்றாக கரைத்து மிளகாய் தூள் வாடை சென்ற பிறகு ஊற்ற வேண்டும். முருங்கைக்காய் தொக்கில் இருக்கும் நீர்ச்சத்தானது முற்றிலும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை அப்படியே விட்டு விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வெள்ளத்தை சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான முருங்கைக்காய் தொக்கு தயாராகிவிட்டது. இந்த முருங்கைக்காய் தொக்கை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தும் பொழுது மூன்று மாதம் வரை கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: அப்பள கார குழம்பு செய்முறை

மிகவும் அற்புத சத்துக்கள் நிறைந்த அதுவும் ஆண்களுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருளாக திகழும் இந்த முருங்கைக்காயை இப்படி நாம் செய்வதன் மூலம் சாதம் இட்லி, தோசை என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும்.

- Advertisement -