அப்பள கார குழம்பு செய்முறை

appala kulambu
- Advertisement -

வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் இரவு படுக்கச் செல்லும் பொழுது நாளைக்கு என்ன டிபன் செய்வது? என்ன குழம்பு வைப்பது? அதற்கேற்றார் போல் என்ன காய்கறி செய்வது? என்று யோசித்துக் கொண்டே இருப்போம். பலரும் தங்களுக்கு காய்கறி செய்ய நேரமில்லாத சூழ்நிலையில் அப்பளத்தை மட்டும் பொரித்து காய்கறியாக தொட்டுக்கொள்ள கொடுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஒரு ஆபத் பாண்டவனாக தான் அப்பளம் திகழ்வுகிறது.

அப்படிப்பட்ட அப்பளத்தை நம் ஆபத் பாண்டவனாக நினைக்கும் அந்த அப்பளத்தை குழம்பு வைக்கவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் எந்தவித காய்கறியும் இல்லை உடனே குழம்பு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கடைக்கு சென்று காய்கறி வாங்க நேரமில்லை என்று நினைப்பவர்களும் வீட்டில் அப்பளம் இருக்கும் பொழுது கவலை எதற்கு என்ற எண்ணத்தில் அப்பளத்தை வைத்து ரொம்பவும் அருமையான சுவையான அப்பள குழம்பு செய்ய முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் அப்பள குழம்பை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அப்பளம் – 10
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 2
  • பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 5
  • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வெல்லம் – ஒரு சிறிய துண்டு

செய்முறை

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அப்பளத்தை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், வரமிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும். வெந்தயம் சிவந்து கடுகு வெடித்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து உரித்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டு வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும் வெங்காயமும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை அதை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக மசிந்த பிறகு இதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

மிளகாய் தூளின் வாடை நன்றாக நீங்கிய பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்ற வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து புளியின் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் ஆவது கொதித்த பிறகு நாம் பொரித்து வைத்திருக்கும் அப்பளத்தை இரண்டு மூன்று ஆக உடைத்து குழம்பில் சேர்த்து லேசாக ஒரு கிண்டி கிண்டி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது தனியாக ஒரு சிறிய கடாயை வைத்து அதில் பொன்னிறமாகும் வரை வெந்தயத்தை வறுத்து அதை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். வெந்தயப் பொடியில் இருந்து அரை ஸ்பூன் மட்டும் எடுத்து, மீதம் இருக்கும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையையும் அதில் ஊற்றி ஒரு கொத்து கருவேப்பிலையும் தூவி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

மிகவும் சுவையான பாரம்பரியமிக்க அப்பள கார குழம்பு தயாராகிவிட்டது. இந்த குழம்பை உடனே சாப்பிடுவதை விட ஐந்து மணி நேரம் கழித்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் அப்பளத்தில் அதிக அளவு உப்பு சேர்ந்திருந்தால் குழம்பில் சேர்க்கக்கூடிய உப்பை சிறிது குறைத்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசால் செய்முறை
மிகவும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இந்த அப்பள குழம்பை நாம் ஆபத் பாண்டவனாக நினைத்து காய்கறி இல்லாத சமயத்தில் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -