சுவையான முட்டை போண்டா 5 நிமிடத்தில் வீட்டிலேயே இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

egg-bonda0
- Advertisement -

கடைகளில் வாங்கி சாப்பிடும் முட்டை போண்டாவை விட நாம் வீட்டிலேயே செய்யும் இந்த முட்டை போண்டா ரொம்பவே சுவையாக இருக்கும். நல்ல ஆரோக்கியமுள்ள இந்த முட்டை போண்டா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமான நல்ல சுவையுடன் இருக்க போகிறது. முட்டை போண்டா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்

முட்டை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை – 5, கடலை மாவு – 6 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா – சிட்டிகை அளவு.

- Advertisement -

முட்டை போண்டா செய்முறை விளக்கம்:
முட்டை போண்டா செய்ய முதலில் ஐந்து முட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எப்பொழுதும் போல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்து எடுத்த முட்டைகளை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எண்ணெயில் போடும் பொழுது வெடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. நன்கு துடைத்து முடித்த பின்பு அதில் கத்தியால் லேசாகக் கீறி காற்று புகும்படி செய்யுங்கள் அல்லது ஃபோர்க் ஸ்பூன் கொண்டு ஆங்காங்கே ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்சிங் பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 6 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மைதா மாவு சேர்க்க விரும்பாதவர்கள் கூடுதலாக ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவையே சேர்த்துக் கொள்ளலாம். பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வாய்வு எடுக்க பெருங்காயத் தூள் சேர்த்து, காரத்திற்கு மற்றும் நல்ல நிறத்திற்கு தேவையான காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். வெறும் மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் விருப்பப்பட்டால் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம், இது ஆப்ஷனல் தான். தேவையில்லை என்றால் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதிகம் நீர்த்து விடாமல் கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பொதுவான பஜ்ஜி மாவு பதத்தை விட முட்டை போண்டாவிற்கு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும். எனவே அதிகம் தண்ணீர் சேர்த்து விடாமல் பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பஜ்ஜி மாவு தயார் ஆனதும் நீங்கள் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். எண்ணெய் கொதித்ததும், அடுப்பை மீடியமாக வைத்து கொண்டு ஒவ்வொரு முட்டைகளையும் எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட வேண்டும். முட்டையை கையால் எடுக்க வேண்டாம், ஏதாவது ஒரு ஸ்பூன் அல்லது கத்தியால் குத்தி எடுத்து எண்ணெயில் போடுங்கள். பிறகு எல்லா புறமும் நன்கு சிவக்க வெந்ததும் எடுத்து சுடச்சுட சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் முட்டை போண்டா வீட்டிலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -