நாக தீவை நோக்கி விசித்திர பயணம் – விக்ரமாதித்தன் கதை

nagam-1

ஒரு நள்ளிரவில் காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதையை கூறியது. ஒரு ஊரில் பத்மநாபன் என்றொரு நபரிருந்தார். அவர் தனது மகளை அந்த ஊரிலுள்ள ஆனந்தன் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரது மகள் பேசும் திறனை இழந்து விட்டாள். அவளை பரிசோதித்த வைத்தியர் அவளது பேச்சுத்திறனை மீண்டும் பெற வங்கக்கடலில் இருக்கும் நாகத்தீவில் காணப்படும் தசமூலம் என்ற மூலிகைமட்டுமே மருந்தாகும் என்றும், ஆனால் அதை கொண்டுவருவது சற்று கடினமான விடயம் எனக்கூறினார் அந்த வைத்தியர். அப்போது ஆனந்தன் தான் எப்பாடு பட்டாவது அந்த மூலிகையை கொண்டுவருவதாக சூளுரைத்தான். அப்படி ஆனந்தன் சொன்ன போது தனது சீடன் சஞ்சயனையும் ஆனந்தனுக்கு பயணத்தில் துணையாக அனுப்பிவைத்தார் அந்த வைத்தியர். வழியில் ஆனந்தனைக் கண்ட, சாகசத்தில் விருப்பம் கொண்ட சிவநாதனும், கபாலியும் ஆனந்தனின் அந்த நாகதீவு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

village

நாகதீவிற்கு ஒரு படகில் அந்த நால்வரும் ஏறி பயணித்து கொண்டிருந்த போது ஒரு திமிங்கலம் அவர்களின் படகை தன் வாலால் அடித்து உடைத்தது. இதனால் அந்த நால்வரும் கடலில் வீசப்பட்டனர். அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஆனந்தனுக்கு, உடைந்த படகின் துண்டை ஒன்று கொடுத்து அதில் அவன் மிதந்து கரைசேர உதவினான் சிவநாதன். ஆனால் ஒரு பெரிய அலை சிவநாதனை இழுத்துச் சென்றது. அவன் இறந்து விட்டான் என்று கருதிய மற்ற மூவரும் ஒரு தீவின் கரையில் ஒன்று சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு பறக்கும் தட்டில் முதியவர் ஒருவர் பயணிப்பதை அம்மூவரும் கண்டனர். அவரிடம் பேசிய போது இது நாகதீவு என்பதை அறிந்தனர். மேலும் தாங்கள் இத்தீவிற்கு வந்த நோக்கத்தை அவரிடம் விவரமாக கூறினர்.

அப்போது அம்முதியவர் இம்மூவரும் தேடி வந்த தசமூலம் மூலிகை இத்தீவிலுள்ள மலையுச்சியிலிருக்கும் மாணிக்கபுரி நகரில் இருப்பதாகவும், அம்மலையுச்சிக்கு செல்லும் பாதையில்லாததால் இப்பறக்கும் தட்டின் மூலமாகவே செல்ல முடியும் என்றும், உங்கள் மூவரில் யார் தனது இளமையை எனக்கு தருகிறீர்களோ அவர்களுக்கு தனது பறக்கும் தட்டை அங்கே செல்வதற்கு தருவதாக கூறினார். அப்போது சஞ்சயன் தானாக முன்வந்து தனது இளமையை அந்த முதியவருக்கு தருவதாக கூறி சில மந்திரங்களை ஜெபிக்க சஞ்சயன் முதுமையடைந்தான். அந்த முதியவர் இளைஞனானார். இப்போது அந்த பறக்கும் தட்டில் பயணித்த கபாலியும், ஆனந்தனும் மாணிக்கபுரியில் இறங்கினர். அங்கே பெரும்பாலான மக்கள் மனித உடலும், மிருகத் தலையுடனும் இருப்பதைக் கண்டனர்.

அங்கிருந்த ஒரு சிலரிடம் இதைப்பற்றி கேட்டறிந்து தாங்கள் இங்கு வந்ததற்கான நோக்கத்தை பற்றியும் கூறினர். இந்த ஊரில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் இந்த நகரின் இளவரசியை அவன் மணக்க விரும்பிய போது அவள் அதற்கு மறுத்துவிட்ட ஆத்திரத்தில், தனது சக்தி வாய்ந்த மந்திரக்கோலின் மூலம் இவ்வூரின் பெரும்பாலான மக்களை இப்படி அவன் மாற்றிவிட்டதாக கூறினர் அவ்வூரில் சிலர். அப்போது அவ்வழியே அந்த மந்திரவாதி செல்வதைக் கண்ட கபாலி, அவன் மீது பாய்ந்து சண்டையிட்டு அவனை அவ்வூர் மக்கள் உதவியுடன் ஒரு மரத்தில் கட்டி, அவனிடமிருந்த மந்திரக்கோலை பறித்து சில மந்திரங்களை ஜெபித்து அம்மக்கள் அனைவரையும் மீண்டும் முழுமனிதர்கள் ஆக்கினான். அப்போது அங்கே வந்த இளவரசி மந்திரவாதியை சிறையில் அடைக்க உத்தரவிட்டாள். மேலும் ஆனந்தனும், கபாலியும் செய்த உதவிக்கு கைமாறாக அந்த தசமூலிகையை அவர்களுக்கு கொடுத்தனுப்பினாள்.

vepillai

- Advertisement -

அதைப் பெற்றுக்கொண்டு பறக்கும் தட்டில் திரும்பிய கபாலியும், ஆனந்தனும் சிவநாதன் அங்கிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். மேலும் சஞ்சயன் மீண்டும் இளைஞனாகியிருந்தான். இப்போது அந்த நால்வரும் அந்த பறக்கும் தட்டில் தங்களது ஊருக்கு திரும்பினர். ஆனந்தன் அந்த தசமூலம் மூலிகையைக் கொண்டு அந்த பேசமுடியாத பெண்ணிற்கு சிகிச்சையளித்து அவளை குணப்படுத்தி, அவளை திருமணம் செய்து கொண்டான். அந்த தீவில் மந்திரவாதியிடம் பறித்த செங்கோலை தன்னோடு வைத்திருந்த கபாலி, அதன் மூலம் பொருளீட்ட நினைத்து அதை பயன்படுத்திய போது, அது வேலைசெய்யவில்லை மேலும் அது அவனை அடிக்க ஆரம்பிக்க அவன் அந்த ஊரைவிட்டே ஓடினான்.

“விக்ரமாதித்தியா” கபாலி அந்த மந்திரக் கோலை பயன்படுத்த நினைத்த போது அது ஏன் வேலை செய்யவில்லை? மேலும் அது அவனை தாக்கவும் செய்தது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.

vikramathithan kathai

அதற்கு விக்ரமாதித்தியன் “மற்ற இருவரும் ஆனந்தனுக்கு உண்மையாகவே அவன் அந்த தசமூலம் மூலிகையை பெற உதவி செய்தனர். ஆனால் கபாலி அந்த மந்திரக்கோலை அந்த மந்திரவாதியிடம் பெற்றது முதலே அதை தனது சுயநலத்திற்கு பயன்படுத்த எண்ணினான். அதற்கான தண்டனையை அவன் அந்த மந்திரக்கோலின் மூலமாகவே பெற்றான்.” என்று பதிலளித்ததும் வேதாளம் தான் முன்பிருந்த முருங்கை மரத்தின் மீதே மீண்டும் ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் நீதியை போதிக்கும் பல கதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.