ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்பது இருக்கத்தான் செய்யும். எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு முன்னேறி உழைத்து சம்பாதிக்கிறார்களோ அதே அளவிற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த அனைத்தையும் இழந்து ஒன்றும் இல்லாமல் போபவர்களும் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் ஒன்றுமில்லாமல் இருந்து சிறுக சிறுக உழைத்து பாடுபட்டு பெரிய நிலைக்கு உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எப்பேர்பட்ட நிலையாக இருந்தாலும் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வெற்றியை தரக்கூடிய நரசிம்மரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெற்றிகளை தரும் நரசிம்மர் தீபம்
உக்கிரமான தெய்வமாக திகழக் கூடியவர் நரசிம்மர். இருப்பினும் முழு மனதோடு பக்தியோடு அன்போடு யார் ஒருவர் “ஹரி ஓம்” என்று அழைக்கிறார்களோ உடனே ஓடி வந்து அவர்களின் கஷ்டத்தை நீக்கக்கூடிய தெய்வமாகவும் அவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட நரசிம்மருக்கு நாம் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தீப வழிபாட்டை அஷ்டமி தினத்தன்று தொடங்குவது மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைக்கக் கூடாது என்று பலரும் கூறுவார்கள். லட்சுமி நரசிம்மரின் படத்தை வைப்பதில் எந்தவித தவறும் கிடையாது. வீட்டில் லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அஷ்டமி தினத்தில் தங்களால் இயலும் பட்சத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது நரசிம்மர் உதயமான 4:30 மணியில் இருந்து 6:00 மணிக்குள்ளோ அல்லது இந்த இரண்டு நேரங்களும் இயலாத பட்சத்தில் இரவில் எட்டு மணிக்கு மேல் நரசிம்மருக்கு நாம் தீபமேற்றி வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு கிழியாத நல்ல வெற்றிலையாக 5 வெற்றிலைகள் தேவைப்படும். இதை லக்ஷ்மி நரசிம்மருக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் நுனி வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு அதில் புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த இலைக்கு மேல் வைத்து விட வேண்டும். இலைக்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி முடித்த பிறகு “ஓம் லட்சுமி நரசிம்மரே போற்றி” என்னும் மந்திரத்தை 54 முறையோ அல்லது 108 முறையோ மனதார உச்சரிக்க வேண்டும். இயன்றவர்கள் அவ்வாறு மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது துளசி இலையால் அர்ச்சனை செய்யலாம். நெய்வேத்தியமாக நரசிம்மருக்கு பானகத்தை வைத்து வழிபட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இப்படி தீபம் காட்டும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் என்னவோ அந்த கஷ்டங்களை நரசிம்மரிடம் கூற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் மாசாணி அம்மன் வழிபாடு
அஷ்டமி தினத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வெற்றிகள் உண்டாகும். வாழ்க்கை அடுத்த முன்னேற்ற நிலையை அடையும்.