ஒன்பது நாட்களும் அம்பிகையை வழிபாடு செய்யும் நாட்களாக திகழ்வதுதான் நவராத்திரி திருவிழா. இந்த நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாள் எந்த தெய்வத்தை எந்த மந்திரத்தை கூறி எப்படி வழிபாடு செய்தால் நாம் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் அதே சமயம் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரியின் ஐந்தாம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். மேலும் மோகினி ஆகவும், நவ துர்க்கையில் ஸ்கந்த மாதாவாகவும் வழிபாடு செய்ய வேண்டிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய வேண்டிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது காலை 6:15 இல் இருந்து 7:15 வரை அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 வரை அல்லது மாலை 5:30 லிருந்து 9:30 வரை. இந்த நேரங்களில் அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து வந்து இந்த வழிபாட்டை மேற்கொள்வது என்பது சிறப்பு. அன்றைய தினத்தில் நாம் சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும். அம்பாளுக்கு புடவை சாற்றுவதாக இருக்கும் பட்சத்தில் சிவப்பு நிற புடவையை சாற்ற வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி தருவதாக இருக்கும் பட்சத்தில் சிவப்பு நிற துணிகளை தருவது நல்ல பலனை தரும்.
அன்றைய தினம் அம்பிகைக்கு பூம்பருப்பு சுண்டலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதாவது கடலை பருப்பு சுண்டலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதனுடன் தயிர் சாதத்தையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதை தவிர்த்து தங்களால் இயலும் பட்சத்தில் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு மற்ற பொருட்களையும் நெய்வேத்தியமாக வைக்கலாம். அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு வைத்து வழிபட வேண்டிய பழமாக கருதப்படுவது மாதுளம் பழம். நவராத்திரியின் ஐந்தாம் நாள் அம்பிகைக்கு அலங்காரத்திற்காக பாரிஜாதம், மல்லிகைப்பூ, முல்லைப்பூ, மனோரஞ்சிதம் போன்ற மலர்களை பயன்படுத்தலாம். திருநீற்றுப்பச்சிலை கிடைக்கும் பட்சத்தில் அந்த இலையை வைத்து அர்ச்சனை செய்யலாம்.
அன்றைய தினத்தில் மகாலட்சுமி 108 போற்றிகளை கூறி வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. மகாலட்சுமியின் அஷ்டகம், ஸ்தோத்திரம் போன்றவற்றையும் பாராயணம் செய்யலாம். அதோடு “ஓம் க்லீம் வைஷ்ணவி தேவியே நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும். நவராத்திரியின் 5ஆம் நாள் அம்பிகையை வைஷ்ணவி தேவியாக நாம் இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நாம் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் வருமானம் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
இந்த நவராத்திரியின் ஐந்தாம் நாள் இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்