நவராத்திரி ஆரம்பம் ஆகப்போகிறது. முதல் நாள் நவராத்திரி என்பது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாளான அக்டோபர் இரண்டாம் தேதி வீட்டில் கொலுவைத்து கலசம் வைத்து நவராத்திரிக்கு தயாராகி இருப்பார்கள். பலரும் தங்களுடைய இல்லத்தில் கொலு வைக்க முடியாமலும் கலசம் வைக்க முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆனால் நவராத்திரி வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களும் கொலு வைத்திருப்பவர்களும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை
முப்பெரும் தேவியரை வழிபடுவதற்கு என்று வருடத்திற்கு ஒரு முறை நவராத்திரி என்ற திருவிழா நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசியாக இருக்கக்கூடிய மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் என்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரியின் முதல் நாள் அம்மனை மகேஸ்வரி தாயாக போற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது.
இப்படி மகேஸ்வரி தாயாக நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய மன பயம் அனைத்தும் நீங்கும். ஒருவருக்கு மன தைரியம் என்பது கிடைத்துவிட்டால் அவர் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் மனம் உடையாமல் தன்னுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெறுவார். அப்படிப்பட்ட மன தைரியத்தை தரக்கூடிய வழிபாடாக தான் நவராத்திரியின் முதல் நாள் வழிபாடு திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
கொலு வைத்திருப்பவர்கள் காலையிலும் பூஜை செய்ய வேண்டும், மாலையிலும் பூஜை செய்ய வேண்டும். அதேபோல் காலையிலும் ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும், மாலையிடும் வைக்க வேண்டும். கொலு வைக்காமல் வழிபாடு மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் மாலை நேரத்தில் வழிபடலாம். கொலு வைத்திருப்பவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு மாலை நேரத்தில் அழைத்து வந்த அவர்களையும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
முதல் நாள் பச்சை நிற ஆடை அணிவதும் பச்சை நிறத்தில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், ஜாக்கெட் துணி போன்றவற்றை தருவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் 5 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டுக்கு நெய்வேத்தியமாக வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் செய்ய வேண்டும். வெண்பொங்கல், கடலைப்பருப்பு வடை போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்யும் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய மலர்கள் மல்லிகைப்பூ, அரளிப்பூ, வில்வ இலை இவை மூன்றும் தான். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெண் பொங்கலையும், சாத்துக்குடியையும் பிரசாதமாக தர வேண்டும். பொதுவாகவே நவராத்திரி சமயங்களில் அம்மனின் போற்றுகளையும் அம்மனுக்குரிய பாடல்களையும் பாடி வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்து முடித்த விட்டு பின்வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களையும் இந்த மந்திரத்தை கூறுமாறு சொல்ல வேண்டும்.
மந்திரம்
ஓம் ஐம் மகேஸ்வரி தாயே நம
ஓம் சர்வ மங்களம் தருபவளே நம
ஓம் தடை நீக்கி அருள் புரிபவளே நம
ஓம் அபய கரத்தாளே நம
ஓம் ஆபத்பாந்தவளே நம
இப்படி நாம் மகேஸ்வரி தாயின் மந்திரத்தை கூறி மல்லிகை, அரளி, வில்வ இலைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் மகேஸ்வரி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மன தைரியம் என்பது உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே:மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய வழிபாடு
இந்த நவராத்திரி முதல் நாள் வழிபாட்டை கொலு வைத்திருப்பவர்களும் கொலு வைக்காமல் சாதாரணமாக வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் பின்பற்றி மகேஸ்வரி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.