மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் நம்மில் பலபேருக்கும் இருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் வழக்கமும் பலரும் வைத்திருப்போம். இந்த முறை நவராத்திரியோடு சேர்ந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சமி திதி என்பது வருகிறது. மூன்று சிறப்புகளும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நம் வாழ்நாள் முழுவதும் பண வசியத்தை உண்டாக்கும். அந்த தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவசிய தாந்த்ரீக பஞ்சமி பரிகாரம்
எதுவெல்லாம் நமக்கு வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை வளர்பிறை பஞ்சமி நாளில் செய்யும் பொழுது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி என்பது உண்டாகும். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பணம் தான் மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. அதனால் பணத்தை வசியம் செய்தால் பணவரவு என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு பண வசிய தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த தாந்திரீக பரிகாரத்தை செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி இரவு 7 மணியிலிருந்து 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக குளித்திருக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. வீட்டில் இருக்கக்கூடிய வேறு ஏதாவது ஒரு நபரை செய்ய சொல்ல வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முனை உடையாத ஒரே ஒரு விரலி மஞ்சள் இருந்தால் போதும். முதலில் நாம் தரையில் ஒரு விரிப்பை விரித்து கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு முனையுடையாத விரலி மஞ்சளை வலது உள்ளங்கையில் வைத்து நன்றாக மூடிக்கொண்டு வராகி அம்மனை மனதார நினைத்து அனைத்து விதமான செல்வங்களும் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வாராகி அம்மனின் பின்வரும் இந்த மந்திரத்தை 15 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் பொறுமையாக கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த பிறகு வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு நம்முடைய சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கல்லுப்பை கொட்டி வைக்கும் டப்பாவிற்குள் இந்த விரலி மஞ்சள் வைத்து விட வேண்டும். இந்த விரலி மஞ்சள் அந்த கல்லுப்பு டப்பாவிற்குள் 48 நாட்கள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். உப்பு குறைய குறைய புதிதாக உப்பை வாங்கி அதில் சேர்த்துக் கொண்டே இருங்கள். அந்த உப்பை நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம். அதில் எந்த தவறும் கிடையாது. 48 நாட்கள் முடிந்த பிறகு அந்த விரலி மஞ்சளை எடுத்து வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நீர்நிலையில் போட்டு விட வேண்டும். இந்த தாந்திரீக பரிகாரம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதோடு பண வசியத்தை உண்டாக்கும்.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் வாராஹி தனவசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. “
இதையும் படிக்கலாமே: நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு
பணவரவு அதிகரிக்க வேண்டும், பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் பண வசியம் உண்டாக வேண்டும். அப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை வாராகி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி நாளன்று செய்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.