வீட்டின் பிரச்சனைகள் நீங்கவும், நல்ல அதிர்வலைகளால் சகலமும் சேரவும், நிலவாசல் படியில் செய்யவேண்டிய வாஸ்து பரிகாரங்கள் இதோ.

nilai-vasal
- Advertisement -

ஒரு வீட்டிற்கு நன்மையான பலன்கள் அல்லது தீமையான பலன்கள் ஏற்படுவது என்பது பெரும்பாலும் அந்த வீட்டின் பிரதான நிலைவாசல் அமைப்பை பொருத்த விடயமாகும். ஒரு வீட்டின் நிலை வாயில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் தெய்வீக அதிர்வலைகள் உண்டாகி, அங்கு வாழ்பவர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கும். சிலருக்கு சில சூழ்நிலைகளால் நிலைவாசல் சரியாக அமையாமல் போய்விடும். அப்படிப்பட்டவர்கள் அந்த நிலை வாயிலில் ஏற்பட்டிருக்கும் வாஸ்து தோஷ குறைபாட்டை சரிசெய்ய என்னென்ன விடயங்களை கடைப்பிடிக்கலாம் என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நிலை வாயிற்படி வழியாக நல்ல அதிர்வலைகளை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடிய சக்தி மாவிலை தோரணத்திற்கு உண்டு. எனவே தினந்தோறும் நிலை வாசல் மீது புதிதாக தொடுத்த மாவிலைத் தோரணம் தொங்க விட வேண்டும். எக்காரணம் கொண்டும் செயற்கையான பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களை நிலை வாசல் மீது தொங்க விடக்கூடாது. தினமும் புது மாவிலை தோரணத்தை கட்ட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது புது மாவிலை தோரணத்தை நிலைவாசல் மீது கட்ட வேண்டும்.

- Advertisement -

நிலை வாசக்காளின் மேர்ப்புறம் அல்லது நிலைவாயிற் கதவுகளில் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் ஸ்டிக்கர் ஒட்டி வைப்பது நல்லது. விநாயகப் பெருமான், யானை உருவங்கள் பொறித்த ஸ்டிக்கர்களையும் நிலைவாசற் கதவுகளில் ஒட்டி வைக்கலாம். சைவ சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள் தங்களின் நிலை வாயிற் கதவில் ஸ்ரீ பைரவ மூர்த்தியின் உருவத்தையும், வைணவ சம்பிரதாயத்தை கடைபிடிப்பவர்கள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் உருவம் பொறித்த ஸ்டிக்கரையும் கதவில் ஒட்டி வைக்கலாம்.

அமாவாசை, பிறப்பு – இறப்பு தீட்டு தினங்களை தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டின் நிலைவாயிற்படியின் இருபுறமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

பஞ்சலோகம் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய 5 உலோகங்களின் கலவையாகும். உங்கள் வீட்டில் குலதெய்வ அருளும், தெய்வீக சக்திகளின் ஆசீர்வாதங்களும் நிறைந்திருக்க நிலை வாசக்காலின் மேற்புற மையப்பகுதியில் சிறிய அளவிலான பஞ்சலோகம் தகடு பதிக்க வேண்டும். இந்த பஞ்ச லோகம் தற்போது அனைத்து ஊர்களிலும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் விற்கப்படுகின்றது. விற்கப்படும் பஞ்சலோகத் தகடு உண்மையானதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கவேண்டும். போலியான பஞ்சலோகத் தகடு வீட்டில் பதிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

எண்ணற்ற வாஸ்து தோஷங்கள் நிறைந்த வீடு அமையப் பெற்றவர்கள் அதே நேரம் அந்த வாஸ்து குறைபாடுகளை போக்க பெரிய அளவிலான பொருளாதார வசதிகள் இல்லாமல் தவிப்பவர்கள் மிக அதிகம் செலவில்லாத “சங்கு ஸ்தாபனம்” பரிகாரத்தை செய்து தங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்களை போக்கிக் கொள்ளலாம்.

ஒரு நல்ல நாளில் சிறிய அளவிலான வலம்புரி சங்கு ஒன்றை வாங்கி வைத்து, “சித்திரை, ஆவணி, கார்த்திகை, மாசி” ஆகிய தமிழ் மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் வருகின்ற வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தில், வீட்டு நிலைவாசல் மீது வலம்புரி சங்கினை கருப்பு கயிற்றில் கட்டி தொங்க விடுவதால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -