அசைவ உணவை மிஞ்சும் சுவையில் இப்படி சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்து கொடுத்தால், ஒரு சட்டி சாதம் செய்தாலும் நொடிப்பொழுதில் அனைத்துமே தீர்ந்து விடும்.

urundai
- Advertisement -

சில உணவுகளை சமைக்கும் பொழுதே அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு வாசனை எட்டி விடும். ஒரு சிலர் கேட்டே விடுவார்கள் இன்றைக்கு உங்கள் வீட்டில் கறி குழம்பா என்று. அந்த அளவிற்கு சைவ குழம்பும் அசைவ குழம்பின் வாசனை வர சில மசாலாக்கள் சேர்த்து செய்வது தான் இதற்கு காரணமாக இருக்கிறது. அவ்வாறு கறிக்குழம்பு சாப்பிடும் அதே சுவையில் மண மணக்க இந்த உருண்டை குழம்பு செய்து கொடுத்துப் பாருங்கள். சுடச்சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ஒரு குழம்பை செய்து வைத்தால் போதும். இதனுடன் தொட்டுக்கொள்ள பதார்த்தம் ஏதும் தனியாக செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. வாருங்கள் இப்படி சுவையான பருப்பு உருண்டை குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – கால் கிலோ, வெங்காயம் – 5, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, சோம்பு – 1 ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, கடுகு – ஒரு ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, பூண்டு – 5 பல், கருவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி, மறுபடியும் அதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் புளியை ஊற வைத்து, அதனை கரைத்து புளித்தண்ணீரை எடுத்து வைக்க வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் 5 பல் பூண்டை உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.

பிறகு கடலை பருப்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தில் இருந்து பாதி அளவு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும். பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், தட்டி வைத்த பூண்டு இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, பெருங்காயத் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் தக்காளி வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட்டு, புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். குழம்பு நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும், பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதே சமயம் கால் மூடி தேங்காயைத் துருவி, மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொண்டு, உருண்டைகள் நன்றாக வெந்து விட்டதா என்று பார்த்த உடன், தேங்காய் விழுதையும் சேர்த்து, இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -