குக்கரில் தான் ரசம் சாதம் செய்யப் போகின்றோம். வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் புது விதமாக இந்த ரச சாதத்தை செய்யப்போகின்றோம். படிக்கும்போது இது ரசம் சாதமா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு வரலாம். ஆனால் மிஸ் பண்ணாம இந்த ரசம் சாதத்தை செய்து ருசித்து பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். உடம்பே முடியல, ஆனா சுட சுட ஏதாவது சாப்பிடனும் போல இருக்குது அப்படின்னா இந்த ரச சாதம் உங்களுக்கு கை கொடுக்கும்.
முதலில் ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை 1 கப் தண்ணீரில் போட்டு ஊற வைத்து கரைத்து புளி கரைசலை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
1 கப் அளவு பச்சரிசி, 1 டேபிள் ஸ்பூன் அளவு துவரம் பருப்பு இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று அல்லது நான்கு முறை நன்றாக சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து விடுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு பல் – 4, பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 1, போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி இதில் ரசப்படி – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் போட்டு, புளி கரைசலை ஊற்றங்கள் இதில் தேவையான அளவு உப்பு போட்டு விட்டு, கழுவி வைத்திருக்கும் அரிசியை இதில் போட்டு, இன்னும் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து ஐந்து விசில் விட வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் கூடுதலாக இன்னொரு கப் தண்ணீர் கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.
விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இதன் மேலே பொடியாக கொத்தமல்லி தழைகளை நறுக்கி தூவி விடுங்கள். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய் – 1 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2 போட்டு, மணக்க மணக்க தாளித்து இதை அப்படியே ரசத்தில் கொட்டி கலந்து தேவை என்றால் லேசாக சாதத்தை மசித்து விட்டு, இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அப்பளத்தை மேலே தூவி, சாப்பிட்டால் அத்தனை அருமையான ருசி இருக்கும்.
இதையும் படிக்கலாமே: சமையலில் இதுவரை நீங்கள் கேள்வி கூட படாத சுலபமான எளிய குறிப்புகள் 10.
பின்குறிப்பு: ரசத்திற்கு தேவையான மிளகு சீரகம் பெருங்காயத்தூள் அனைத்துமே அந்த ரசப்பொடியில் இருக்கும். மிளகு சீரகம் போடல, பெருங்காயம் போடல, என்ற சந்தேகத்தை விடுத்து விட்டு, மேலே சொன்ன குறிப்பை பின்பற்றி ரசம் சாதத்தை செய்து பாருங்கள் சுவை உங்களை ஏமாற்றாது. தேவைப்பட்டால் இதை புழுங்கல் அரிசியிலும் செய்து சாப்பிடலாம்.