ஒரே செடியில் எப்படி 2 விதமான நிறங்களில் பூக்களை பூக்க வைக்கிறார்கள் தெரியுமா? உங்க வீட்டுச் செடியும் 2 கலர்களில் பூ கொடுக்கும் இப்படி செஞ்சு பாருங்க!

hibiscus-sembaruthi1
- Advertisement -

பூச்செடிகள் வளர்ப்பவர்கள் பொதுவாக ஒரு செடியில் ஒரு விதமான பூக்கள் மட்டுமே பூப்பதை பார்த்திருப்பீர்கள். உதாரணத்திற்கு ரோஜா செடியை எடுத்துக் கொண்டால் ஒரு ரோஜா செடியில் மஞ்சள் நிறமும், இன்னொரு ரோஜா செடியில் வெள்ளை நிறமும் கொண்ட பூக்கள் பூக்கும். அதுபோல ஒவ்வொரு செடியிலும் ஒவ்வொரு விதமான நிறங்களில் பூக்கள் பூக்கும். அதில் நமக்கு எந்த நிற பூக்கள் ரொம்ப விருப்பமோ, அந்த நிற பூக்கள் நிறைந்துள்ள செடியை வாங்கி வைத்து வளர்ப்பது உண்டு. ஆனால் ஒரே செடியில் இரண்டு விதமான நிறங்களில் பூக்களை பூக்க செய்ய முடியும்! இரண்டு மட்டும் அல்ல, பலவிதமான வண்ணங்களிலும் பூக்களை பூக்க வைக்க முடியும். இதை எப்படி செய்கிறார்கள்? ஒரு செடியில் பல வண்ண பூக்கள் பூப்பது எப்படி? இதற்குப் பெயர் என்ன? என்பது போன்ற சுவாரஸ்ய கார்டனிங் தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ஒரு செடியில் ஒரு நிறத்தில் பூக்கள் பூத்தாலும் அதில் வித்தியாசங்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே செடியில் நாலைந்து பூக்கள் நாலைந்து வண்ணங்களில் பூத்தால் எப்படி இருக்கும்? பார்ப்பதற்கு மிகுந்த ரம்யமாய் காட்சி அளிக்க கூடிய இந்த விஷயத்தை நம் வீட்டிலும் நாம் செய்ய முடியுமா? இப்போது உங்கள் வீட்டில் ஒரு செம்பருத்தி செடி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது சிகப்பு நிற பூக்களை கொடுக்கும் செம்பருத்தி செடி என்று கொள்வோம். ஆனால் உங்களுக்கு இதே செடியில் வெள்ளை நிற செம்பருத்தி பூக்க வேண்டும்? அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்?

- Advertisement -

ஒரு செடியில் இருந்து கிளையை பிரித்து வந்து இன்னொரு செடியில் ஒட்டு கட்டுவதை ‘ஒட்டு கட்டுதல்’ என்று கூறுவார்கள். இதை ஆங்கிலத்தில் கிராஃப்டிங் என்று கூறப்படுவது உண்டு. இந்த கிராஃப்டிங் முறையில் தான் ஒரு செடியில் பலவிதமான பூக்கள் பூக்க செய்யப்படுகிறது. இதை நர்சரிகளில் மட்டுமல்ல வீட்டில் சாதாரணமாக நாமும் செய்து பார்க்க முடியும். இதை ரொம்ப சுலபமாக செய்து பார்க்கக் கூடிய ஒரு வகையான செடி தான் செம்பருத்தி! இந்த செடியில் முதலில் ட்ரை பண்ணி பாருங்க, பிறகு உங்களுடைய மற்ற பூச்செடிகளிலும் இதே போல செஞ்சு பார்க்கலாம்.

சிகப்பு நிற செம்பருத்தி செடி வைத்திருப்பவர்கள் அதன் ஒரு கிளையில் இருக்கும் இலைகளை மட்டும் கத்தரித்துக் கொள்ளுங்கள். இதற்கு கூர்மையான கத்தி ஒன்று தேவை. இந்த கத்தியால் கிளை முழுவதும் இருக்கும் இலைகளை சுத்தம் செய்துவிட்டு, பின்னர் வெள்ளை நிற செம்பருத்தி செடியின் ஒரு கிளையை உடைத்து வாருங்கள். உடைத்த அந்த குச்சியில் இருக்கும் எல்லா இலைகளையும் கத்தியால் நீக்கி விடுங்கள். பின்னர் குச்சியின் ஒரு முனை பகுதியை பென்சில் சீவுவது போல சீவி கூர்மையாக சீவிக் கொள்ளுங்கள். உருளையாக இருக்கும் குச்சியை தட்டையாக்கி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு சிகப்பு நிற செம்பருத்தியில் நீங்கள் சீவி விட்ட கிளையில் பாதி அளவிற்கு வெட்டி விடுங்கள். வெட்டிய பகுதியின் முனைப்பகுதியை இதே போல சுற்றிலும் தோல் உரித்தது போல சீவிக் கொண்டு நடுவில் இரண்டாக பிளந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வெள்ளை நிற சீவிய கிளையை இந்த பிளவுக்குள் வைத்து இறுக்கமாக மூடி ஒரு மெல்லிய பிளாஸ்டிக் கவரால் முழுவதும் இறுக்கமாக மூடி விட வேண்டும். கீழிருந்து மேல் வரை வெளியில் தெரியாதபடி நன்கு இறுக்கமாக மூடி முடிச்சி போட்டுக் கொள்ளுங்கள்.

சரியாக இரண்டு வாரத்திற்கு பிறகு பார்த்தால் நன்கு ஒட்டுக்கட்டி இருந்த இரண்டு கிளைகளும் சேர்ந்து இருக்கும். நீங்கள் அதிலிருந்து புதிய இலை மொட்டுக்கள் துளிர்வதையும் காண முடியும். இதிலிருந்து வளரக்கூடிய பூக்கள் வெள்ளை நிறத்திலும், மற்ற கிளைகளில் சிகப்பு நிறத்திலும் இப்போது பூக்க ஆரம்பிக்கும். இதே முறையில் நீங்கள் வேறு வேறு நிறங்களையும் ஒட்டுகட்டி விட்டால் ஒரே செடியில் பல வண்ணங்களில் உங்களால் பூக்களை அள்ள முடியும்.

- Advertisement -