ரொம்ப ரொம்ப ஈஸியா பாலக்கீரை கூட்டு இப்படி செஞ்சு பாருங்க. சும்மா ஜம்முனு இருக்கும். ஆரோக்கியம் தரும் இந்த கூட்டை இன்னும் கொஞ்சம் போடுங்க! என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

kootu
- Advertisement -

பொதுவாகவே குழந்தைகள் என்றாலும், பெரியவர்கள் என்றாலும் கீரை வகைகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், கீரை வகைகளை கொஞ்சம் சுவையாக சமைத்து கொடுத்தால் சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். அப்படி ஒரு பாலக்கீரை கூட்டு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் பாலக்கீரை வாங்கினால் ஒரு முறை இப்படி ஒரு கூட்டை சமைத்து பாருங்கள்.

ஒரு பெரிய கட்டு பாலக் கீரையை வாங்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு அதை மிகவும் பொடியாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் இதைக் கடையப் போவது கிடையாது. ஆகவே, கீரையை மிகவும் பொடியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். சிறிய கட்டு பாலக்கீரையாக இருந்தால் இரண்டு கட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு குக்கரில் 150 கிராம் அளவு பாசிப்பருப்பை கழுவி போட்டு, 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து 2 விசில் விட்டு பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு கொழகொழவென வெந்து விடக்கூடாது. 90% பாசிப்பருப்பு இருந்தால் போதும். வேக வைத்த பருப்பு அப்படியே இருக்கட்டும். இப்போது கூட்டை தாளித்து விடலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய் – 2, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 6 நசுக்கியது, குறுக்காக கீறிய பச்சைமிளகாய் – 4, கறிவேப்பிலை ஒரு கொத்து, இந்த பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூண்டு எண்ணெயில் வதங்கி வாசம் வரும்போது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 சேர்த்து, 2 நிமிடம் வதக்கி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கீரையை கடாயில் போட்டு 1 நிமிடம் வரை வதக்கி, குக்கரில் வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் ஊற்றி, தேவைக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித் தூள் – 1/4 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விட்டு ஒரு மூடி போட்டு கீரைக்கூட்டை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

5 நிமிடம் போல கொதிக்க வைத்தால் மணக்க மணக்க கீரை கூட்டு தயாராகி இருக்கும். இறுதியாக உங்களுக்கு தேவைப்பட்டால் துருவிய தேங்காயை 2 டேபிள்ஸ்பூன் அளவு இந்த கீரை கூட்டுடன் சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

சுடச்சுட சாதத்தில் இந்தக் கூட்டை போட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். தேவைப்பட்டால் இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இந்த கூட்டை பரிமாறலாம். பாலக்கீரை அல்லாது சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரையிலும் கூட இந்த கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -