இந்த இரண்டு பொருட்களை சேர்த்து மசாலா குருமாவை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள்! 10 நிமிஷத்துல ஆரோக்கியமான சைடிஷ் ரெடி!

potato-kuruma

உருளைக் கிழங்கையும், பச்சை பட்டாணியையும் வைத்து ஒரு சூப்பர் குருமா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகும். இந்த இரண்டு பொருட்களை சேர்த்து வைக்கும் இந்த சைடிஷ், உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், நாவிற்கு நல்ல சுவையும் கொடுக்கும். மிக மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். அதுமட்டுமல்லாமல், இந்த குருமாவில் மிளகாய்தூள் சேர்க்க போவது இல்லை. பச்சை மிளகாயை மட்டும் வைத்து வித்தியாசமான முறையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

potato-urulai

Step 1:
முதலில் சின்ன மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு, அதில் இஞ்சி சிறிய துண்டுகள் – 4, பூண்டு – 6, பச்சை மிளகாய் – 2 சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்தப்படியாக குருமாவுக்கு தேவையானது பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு. உங்களுக்கு ஃபிரஷ்ஷான பச்சை பட்டாணி கிடைத்தால் அதை அப்படியே தோல் நீக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி இல்லை என்றால், முந்தைய நாளே காய்ந்த பட்டாணியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, குக்கரில் போட்டு, ஒரு விசில் மட்டும் வைத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பொடிசா வெட்டிவிட வேண்டாம்.

Step 2:
அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும், சோம்பு 1/2 ஸ்பூன், பட்டை – 2, லவங்கம் – 2, நட்சத்திர சோம்பு – 1, ஏலக்காய் -2, பிரியாணி இலை -1, இவைகளை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீறிய பச்சை மிளகாய் – 2, ஒரு கொத்து கறி வேப்பிலை, இவைகளைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கி, கூடவே பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

kuruma

Step 3:
குக்கரில் சேர்த்த அனைத்து பொருட்களும், நன்றாக வதங்கி வந்தவுடன் தயாராக இருக்கும் பச்சைபட்டாணி, உருளை கிழங்கையும் சேர்த்து, ஒரு நிமிடம் வரை வதக்குங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

Step 4:
இப்போது மிக்ஸி ஜாரில் 1 கப் அளவு தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு -10, சோம்பு – 1/2 ஸ்பூன், கசகசா – 1/4 ஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து, குக்கரில் இருக்கும் காய்கறிகளோடு, தேங்காய் விழுதை சேர்த்து விட வேண்டும். (முந்திரிப் பருப்புக்குப் பதில் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை வைத்துக் கொள்ளலாம்.)

kuruma1

குருமாவுக்கு  தேவையான அளவு, மிக்ஸி ஜாரை கழுவி இந்த இடத்தில் தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். இறுதியாக கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி தழையை தூவி விடுங்கள், அவ்வளவு தான். குக்கரை மூடி போட்டு, மிதமான தீயில் வைத்து, ஒன்றிலிருந்து இரண்டு விசில் வைத்தாலே போதும். நிறம் வேண்டும் என்று தேவைப்படுபவர்கள் கொஞ்சமாக மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளலாம். கமகமக்கும் குருமா நிமிடத்தில் தயாராகிவிடும். இட்லி தோசை பூரி சப்பாத்தி எதற்கு வேண்டுமென்றாலும் அருமையான சைட் டிஷ் இது.

இதையும் படிக்கலாமே
ரோட்டு கடை மசாலா சுண்டலை நம்முடைய வீட்டில் இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா? வெறும் 15 நிமிஷம் போதுமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.