பாரம்பரிய சுவையில் வெள்ளை நிறத்தில், செட்டிநாடு பணியாரம் எப்படி செய்வது. இந்த ரெசிபியை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். சரியான அளவுகளில் அரிசி உளுந்தை அரைத்து, செய்தால் வெள்ளை வெள்ளையாக பஞ்சு போல ஒரு பணியாரம் தயாராகிவிடும். சாப்பிடுவதற்கு நல்ல ருசி இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள நல்ல காரசாரமான தக்காளி சட்னி, காரச் சட்னி, சைடு டிஷ் ஆக வைப்பது சரியான காம்பினேஷன். வாங்க நேரத்தை கடத்தாமல் பாரம்பரிய சுவையில் இன்று நாம் எல்லோரும் மறந்த அந்த ரெசிபி திரும்பவும் நினைவு படுத்தலாம்.
செய்முறை
ஒரு டம்ளரில் பச்சரிசியை அளந்து கொள்ள வேண்டும். பச்சரிசியை கோபுரமாக அளக்கக்கூடாது. தலை தட்டி அளக்க வேண்டும். நீங்கள் அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு அல்லது டம்ளர் எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்தி அரிசியை அளக்கலாம். தலை தட்டி அரிசி வையுங்கள். தலைதட்டி அரிசிக்கு மேலே கோபுரமாக உளுந்தை வைக்க வேண்டும். அப்போது 1 டம்ளர் அரிசிக்கு ஏறக்குறைய 2 டேபிள் ஸ்பூன் உளுந்து சரியாக இருக்கும்.
அந்த காலத்தில் நம்முடைய பாட்டிகள் ஆழாக்கு தலை தட்டி அரிசி, அதன் மேலே கோபுரமாக உளுந்தை வைத்து அளப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைத்தால் போதும். நிறைய நேரம் ஊறினால் பணியாரம் எண்ணெய் குடித்து விடும்.
ஊறிய அரிசி பருப்பு இரண்டையும் மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு உங்கள் சவுகரியம் போல அரைத்துக் கொள்ளலாம். மாவு நைசாக நன்றாக அரைபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ரொம்பவும் கட்டியாக இருக்கக் கூடாது. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு இந்த மாவை ஒரு குழி கரண்டியில் எடுத்து சூடான எண்ணெயில் ஊற்ற வேண்டும். (கடாயில் ஊற்றும் போது ஒவ்வொரு பணியாரமாக தான் சுட்டு எடுக்க முடியும். அகலமான பேன் இருந்தால் மூன்று அல்லது நான்கு வாத்து சுட்டு எடுக்கலாம்.) இது சிவக்க ரொம்ப நேரம் எடுக்காது. இரண்டே நிமிடத்தில் சட்டு சட்டு என்ன சுட்டு எடுக்கலாம்.
பணியாரத்தை எண்ணெயில் ஊற்றிய பிறகு ஒரு சில நொடிகளில் மேலே எழும்பி வரும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பணியாரம் வெந்து வந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும். இந்த பணியாரம் சிவக்காது வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் உள்ளே நன்றாக வேக வைத்து எடுங்கள். சுற்றி லேசாக மொறுமொறுப்பாகவும் நடுவே பஞ்சு போலவும் இந்த பணியாரம் நமக்கு கிடைக்கும். இது சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு விட வேண்டும். காரசாரமான எந்த சட்னியையும் இதற்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். காரச் சட்னி பரிமாறினால் காலை உணவு சூப்பராக எல்லோருக்கும் பிடித்தபடி அமையும்.
இதையும் படிக்கலாமே: குருவாயூர் ஸ்பெஷல் ரசக்காலன் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லனா கண்டிப்பா இப்படி செஞ்சி சாப்ட்டு பாருங்க. இதை ஒரு முறை டேஸ்ட் பண்ணிட்டீங்கன்னா அடிக்கடி இதை தான் செய்வீங்க.
பின்குறிப்பு: பணியாரத்தை எண்ணெயில் ஊற்றி சுட்டு எடுத்ததும் அதை பிரித்துப் பாருங்கள். உள்ளே மாவாக வேகாமல் இருப்பது போல இருந்தால், உங்கள் மாவு ரொம்பவும் கட்டியாக இருக்கிறது இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும் என்று அர்த்தம். அதே சமயம் நிறைய தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து விட்டால் எண்ணெய் குடிக்கும். பக்குவமாக செய்யும் போது ரெசிபி பக்காவாக கிடைக்கும்.