தமிழ் புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய சுவையில் சர்க்கரைப் பொங்கலை இப்படி செய்து, புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்

pongal1
- Advertisement -

ஒவ்வொரு வருடமும், புதியதாக துவங்கும் பொழுது ஒவ்வொருவரின் மனதிலும் புதிய நம்பிக்கை பிறக்கிறது. இந்த வருடம் நமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும், நமக்கு நல்ல வேலை கிடைக்கும், நாம் இந்த வருடம் நன்றாக படிப்போம், நமது பிள்ளைகள் நல்ல வேலைக்கு செல்வார்கள் இப்படி ஒவ்வொருவரும் தங்கள் கனவுகள் நிறைவேற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்வார்கள். அப்படி இந்த புத்தாண்டை வரவேற்க அனைவரது வீட்டிலும் சுவையான இனிப்பு பலகாரம் செய்வார்கள். பின்னர் இந்த இனிப்பு பலகாரங்களை அக்கம்பக்கத்தினரிடம் பரிமாறிக் கொண்டு தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள். எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் தொடங்குவதாக இருந்தால் அதில் இனிப்பை தான் முதலில் வழங்க வேண்டும். இந்த இனிய புத்தாண்டை வரவேற்க நமது பாரம்பரிய உணவான சர்க்கரை பொங்கல் செய்து, இறைவனுக்குப் படைத்து, இந்த புதிய ஆண்டு நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வருடமாக இருக்கவேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – கால் கிலோ, வெல்லம் – 300 கிராம், நெய் – 150 கிராம், முந்திரிப்பருப்பு – 50 கிராம், திராட்சை – 25 கிராம், ஏலக்காய் – 5, பாசிப்பருப்பு – 100 கிராம், தேங்காய் – கால் மூடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் பச்சை அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனை தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவிக் கொண்டு, மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து, முக்கால் பங்கு தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைத்து விட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும். பாசிப்பருப்பு பாதி அளவு வெந்ததும் ஊற வைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அரிசியை மட்டும் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். இவை நன்றாக கொதித்து வேகும் பொழுது மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் 300 கிராம் வெல்லத்தை சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிறிது நேரத்தில் வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பை அனைத்து விட்டு, இந்த வெல்லக் கரைசலை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு இவை இரண்டும் சேர்ந்து வேகும் பொழுது இதனுடன் 5 ஏலக்காயை பொடியாகத் தூள் செய்து சேர்க்க வேண்டும். அரிசி நன்றாக வெந்து கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து சாதம் வெந்து விட்டதா என பார்த்து விட்டு, சாதத்தில் இருக்கும் தண்ணீர் முக்கால் பங்கு குறைந்து, சாதம் கெட்டியானதும் வெல்லக் கரைசலை சேர்த்து கலந்து விடவேண்டும்.

வெல்லக் கரைசல் சேர்த்து ஐந்து அல்லது ஏழு நிமிடம் கழித்து சர்க்கரைப் பொங்கலை அடுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை சேர்த்து தாளித்து, சர்க்கரை பொங்கலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக கால் மூடி தேங்காயைத் துருவி பொங்கலுடன் சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயாராகிவிடும்.

- Advertisement -