பருப்பு சேர்க்காமல் பரங்கிக்காய் வைத்தது இப்படி சாம்பார் செய்தால் 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

sambar1
- Advertisement -

சாம்பார் என்றால் பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இட்லி, தோசை, சாதம் போன்ற அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட அடிக்கடி அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குழம்பு வகை சாம்பார் மட்டும் தான். சாம்பாரை பலவகை இருக்கிறது. மிளகாய் கிள்ளி சாம்பார், வெங்காய சாம்பார், தக்காளி சாம்பார், பருப்பு சாம்பார், காய்கறி சாம்பார் என்று பல விதமாக இந்த சாம்பாரை சமைக்க முடியும். ஒவ்வொரு சாம்பாரும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஆனால் இந்த சாம்பார் செய்வதற்கு முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருள் துவரம் பருப்பு. இந்த துவரம் பருப்பும் இல்லாமல் மிகவும் சுவையான சாம்பாரை இப்படியும் செய்ய முடியும். வாருங்கள் அப்படி பருப்பில்லாமல் செய்யும் இந்த சுவையான சாம்பாரை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 7 பல், தக்காளி – 4, பரங்கிக்காய் – 150 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, வரமிளகாய் – 7, கடலைப் பருப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்க வேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் 10 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய 3 தக்காளி, பூண்டு பல், பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, வர மிளகாய் மற்றும் சிறிய துண்டு பட்டை இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரை திறந்து அதில் வேக வைத்த வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பெருங்காயத் தூள் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இவற்றுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, இறக்கினால் சுவையான சாம்பார் தயாராகிவிடும்.

- Advertisement -