வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம், வீட்டில் இருக்கும் இந்த பொருட்களைக் கொண்டு சுலபமாக ருசியான குழம்பை வைத்துவிடலாம்.

kuzhambu
- Advertisement -

நம் வீட்டு பிரிட்ஜில் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறியை வாங்கி வைத்துக் கொல்வதுண்டு. ஆனால் காய்கறிகளை தினமும் சமைத்துக் கொண்டு இருந்தால், சிலருக்கு சலிப்பு தட்டி விடுகிறது. ஹோட்டல் உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சில நேரங்களில் காய்கறி உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டுவது என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு சவால் ஆகிவிடுகிறது. காய்கறி உணவுகளை குழந்தைகள் பெரும்பாலும் ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகிறது. எனவே வித்தியாசமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது? என்று இப்பதிவில் பார்க்கலாம்.

பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 1/4 கப், துவரம் பருப்பு – 1/2 கப், வர மிளகாய் – 3, சோம்பு – இரண்டு ஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி – 1 கொத்து.

- Advertisement -

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், வெங்காயம் – 1, தக்காளி – 1, எண்ணெய் – இரண்டு மேஜை கரண்டி, தேவையான அளவு தண்ணீர், உப்பு – தேவைக்கேற்ப.

முதலில் நாம் உருண்டையை செய்து கொள்ளலாம். கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் மூன்று வரமிளகாயை போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, கொத்தமல்லி இலையையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டு, உப்பு சேர்த்து அனைத்தையும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

- Advertisement -

இதை ஒரு இட்லி குக்கரில் வைத்து 10 அல்லது 12 நிமிடம் வேக வைக்க வேண்டும். இது போன்று வேக வைத்துக் கொள்வதால் உருண்டைகள் உடைவதில்லை. இப்பொழுது உருண்டைகளை தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெயை 2 மேஜை கரண்டி அளவிற்கு ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 2 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்கு வதங்கிய பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

இப்பொழுது அதில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கரைத்து வைத்த புளி தண்ணீரையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்தவுடன் குழம்பிற்கு தேவையான உப்பை போட்டு, வேக வைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் குழம்பை கொதிக்க விட வேண்டும். அவ்வளவு தான், சுவையான உருண்டை குழம்பு தயார். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும், இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -