உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாரம்பரிய உணவான மதுரை ஸ்பெஷல் பருத்திப் பாலை இப்படி ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

healthydrink
- Advertisement -

பண்டைய காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. அப்படி இருந்த சூழ்நிலையில் உடலில் எந்தவித ஆரோக்கிய சீர்கேடும் இல்லாமல் நலமுடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான உணவை இழந்ததால் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் உடல் வலிமை பெறுவதற்காக பருத்திப் பாலை காலையில் குடித்து வந்தனர். இன்றளவும் மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பருத்திப் பால் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பருத்திப் பாலை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த பருத்திப்பால் திகழ்கிறது. பருத்தி பாலில் பல எண்ணற்ற புரோட்டீன்கள் அடங்கியிருக்கின்றன. மேலும் உடலில் இருக்கக்கூடிய சளிகள் அனைத்தையும் இந்த பருத்திப்பால் வெளியேற்றுவதுடன், உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் கூட்டுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த பருத்திப்பால் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பருத்திக்கொட்டை – 1/4 கிலோ, சுக்கு – ஒரு இன்ச், மிளகு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 7, பச்சரிசி – 50 கிராம், தேங்காய் – 1/4 மூடி, வெல்லம் – 1/2 கிலோ.

செய்முறை

முதல் நாள் இரவே பருத்திக்கொட்டை மூன்று நான்கு முறை கழுவி ஊறவைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சுக்கு, மிளகு, ஏலக்காய் இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்திருக்கும் பருத்திக்கொட்டை சேர்க்க வேண்டும். அதை தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும். பருத்திக்கொட்டை ஒன்றிரண்டாக ஓடிய பிறகு, அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவை நன்றாக அரைபட்ட பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிழிந்த சக்கையை மறுபடியும் மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி, மறுபடியும் நன்றாக ஆட்டி வடிகட்டி நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று முறையாவது பருத்திப் பாலை வடிகட்டி எடுத்துக் கொண்டால் அதில் எந்தவித கசடுகளும் இருக்காது. தேங்காய் பால் எடுப்பது போல பருத்திக்கொட்டை பால் எடுக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் பருத்திக்கொட்டை பாலை ஊற்ற வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிண்டி விட வேண்டும். மறுபுறம் ஊற வைத்திருந்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

அவை நைசாக அறைந்த பிறகு அதில் ஏற்கனவே நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சுக்கு, ஏலக்காய் பொடியை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி பாலில் பச்சை வாசனை சென்ற பிறகு அரைத்த இந்த விழுதை அடுப்பில் இருக்கும் பருத்திப் பாலில் வடிகட்டி சேர்த்து விட வேண்டும்.

பிறகு கைவிடாமல் நன்றாக கிளறி விட வேண்டும். மற்றொரு அடுப்பில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு அதையும் வடிகட்டி பருத்தி பாலில் சேர்த்து விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதில் துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு சாம்பார் கமகமன்னு மணப்பதற்கு இந்த 1 பொருள் தாங்க காரணம். இந்த ரகசிய குறிப்பை தெரிந்து கொண்டால் நம் வீட்டிலும் தினம் தினம் மணக்க மணக்க விருந்து சாம்பார் தான்.

மிகவும் சத்து மிகுந்த இந்த பருத்திப் பாலை வாரத்தில் ஒரு முறையாவது வீட்டில் செய்து கொடுப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும் நலமுடனும் வாழ்வார்கள்.

- Advertisement -