ஈஸியா செய்யக்கூடிய பாசிப்பருப்பு ஹல்வா ரெசிபி. எப்படி செய்யணும்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

- Advertisement -

கேசரி செய்யும் நிமிடத்திற்குள் சட்டுனு செய்யக்கூடிய இந்த பாசிப்பருப்பு அல்வா, எல்லோருக்கும் நிச்சயம் ரொம்பவே பிடித்து போய் விடப் போகிறது. பாசிப்பருப்பில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் அல்வா செஞ்சு சாப்பிட்டதுண்டா? சட்டுனு ஒரு கப் பாசிப்பருப்பு இருந்தா, இப்பவே செஞ்சு பாருங்க. இனி உங்க வீட்டு ஸ்பெஷல் ரெசிபியா இது கண்டிப்பா மாறிடும். ஈஸியான முறையில் பாசிப்பருப்பு ஹல்வா ரெசிபி தயாரிப்பது எப்படி? என்று பார்த்து விடுவோம் வாங்க.

பாசிப்பருப்பு அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – ஒரு கப், நெய் – 4 டேபிள் ஸ்பூன், பொடித்த முந்திரி பருப்பு – அரை கைப்பிடி, ரவை – ஒரு டேபிள் ஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 21/2 கப், சர்க்கரை – 2 கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

பாசிப்பருப்பு அல்வா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து அப்படியே விட்டுவிடுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு ஒரு பேனில் சேர்த்து நன்கு பொன்னிறமாக ஈரப்பதம் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த இந்த பாசிப்பருப்பை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். காய்ந்து வந்ததும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த முந்திரி பருப்புகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மீதம் இருக்கும் நெய்யில் இப்பொழுது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரவையும், ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவும் சேர்த்து லேசாக வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுப்பது நல்லது. பின்னர் அதிலேயே நீங்கள் பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவையும் போட்டு வறுக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு எல்லா மாவும் நன்கு கலந்து திரண்டு வர வறுத்து எடுத்த பின்பு அதில் இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தண்ணீரை முழுவதும் ஐந்து நிமிடத்தில் மாவு அனைத்தும் உறிஞ்சி கொள்ளும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு திரண்டு வந்ததும், நீங்கள் சர்க்கரை சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து கிண்டி விடுங்கள். சர்க்கரை இளக ஆரம்பிக்கும், இந்த ஈரப்பதமே இதற்கு போதுமானது, தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. சர்க்கரை முழுவதும் நன்கு கரைந்து வரும் பொழுது, ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக நெய் தேவையான அளவிற்கு விட்டு பிரட்டி விடுங்கள். அல்வா என்றாலே நெய் அதிகம் சேர்க்க வேண்டும்.

தேவையான அளவிற்கு நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டதும் பேனில் ஒட்டாத அளவிற்கு வர வேண்டும். அது போல ஸ்பூனில் எடுத்து கீழே போட்டால் ‘தொப்’ என்று விழ வேண்டும். அந்த பதத்திற்கு வரும் வரை நன்கு கிண்டி விடுங்கள். கடைசியாக வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அவ்வளவுதாங்க, இப்போ சுடச்சுட இந்த ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பருப்பு ஹல்வாவை பரிமாறி சாப்பிட்டு பாருங்க, கண்டிப்பாக திரும்பத் திரும்ப சாப்பிடணும்னு தோணும்.

- Advertisement -