ஒருமுறை இப்படி தோசை செஞ்சு பாருங்க! அதுக்கு அப்புறம் ஒரு கைப்பிடி பழைய சாப்பாட்டை கூட தூக்கிப் போட உங்களுக்கு மனசே வராது!

veggitable-dosai-rice
- Advertisement -

ஒரு சிலர் எல்லாம் மதியம் செய்த சாப்பாடு மீதம் ஆகி விட்டால் அதை இரவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இரவில் சூடாக சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அந்த மீந்து போன சாப்பாட்டையே வித்தியாசமான வகையில் அட்டகாசமான சுவையுடன் கூடிய மொறுமொறு தோசை செய்து சாப்பிடலாம். சாதம் என்பது அன்னபூரணிக்கு இணையானது. அதனை எப்பொழுதும் வீணாக்கக் கூடாது. இரவு நேரம் சாப்பாட்டை கூட பலரும் குப்பையில் கொட்டி தோஷத்தை வாங்கிக் கொள்வார்கள். அன்னத்தை அவமதித்தால் வறுமை தாண்டவமாடும் எனவே மீந்து போன இந்த சாப்பாட்டை எப்படி புதுமையான முறையில் தோசையாக மாற்றுவது? பழைய சாதம் வைத்து மொறுமொறு தோசை சுடுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

‘பழைய சாதம் தோசை’ செய்ய தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – 2 கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 1, தக்காளி – 1, நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, வெங்காயத்தாள், குடைமிளகாய், கேரட் ஆகிய காய்கறிகள் கொஞ்சம், உப்பு மற்றும் நெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘பழைய சாதம் தோசை’ செய்முறை விளக்கம்:
மீந்து போன பழைய சாதத்தை 2 கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். அதனுடன் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்து நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் கொஞ்சம் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பாட்டில் உப்பு போட்டு சமைப்பபீர்கள் என்றால் குறைவாகவே சேர்த்துக் கொள்வது நல்லது.

veggitable-dosai

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கள் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நீங்கள் கலந்து வைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அந்த மாவில் சீரகத் தூள், மிளகு தூள், சில்லி ஃப்ளேக்ஸ் கொஞ்சம் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவு, தோசை மாவு பதத்திற்கு வந்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி அதில் தேவையான அளவிற்கு மாவை ஊற்றி சுற்றிலும் நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். மாவின் மீது பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாய், வெங்காயத்தாள் போன்ற உங்களுக்கு பிடித்தமான இஷ்ட காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்து தூவி கொள்ளுங்கள்.

veggitable-dosai1

ஒருபுறம் சிவக்க வறுபட்டதும் திருப்பி போடுங்கள். அவ்வளவு தாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா பத்து நிமிடத்தில் மீந்து போன பழைய சாதத்தை வைத்து புத்தம் புதிய மொறுமொறுவென்று இருக்க கூடைய ஒரு வெஜிடபிள் தோசை ரெடி. தின்னத் தின்னத் திகட்டாத இந்த தோசையை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -