ஸ்டார் ஹோட்டல் சுவையில் பிளைன் பரோட்டா சால்னா கெட்டியாக இப்படி செஞ்சு பாருங்க, பார்க்கும் பொழுதே நமக்கு சாப்பிட தோன்றும்! கறிகாய் எதுவும் சேர்க்காத பிளைன் கெட்டி சால்னா எளிதாக செய்வது எப்படி?

plain-kurma3
- Advertisement -

காய்கறிகள், கறி எதுவும் சேர்க்காத இந்த சைவ பரோட்டா பிளைன் சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கப் போகிறது. ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டிலேயே ஸ்டார் ஹோட்டல்ஸ் ஸ்டைலில் பிளைன் சால்னா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.

பிளைன் சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
முழு முந்திரி பருப்பு – 5, கசகசா – ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பட்டை – 2, பிரிஞ்சி இலை – 2, கிராம்பு – 4, ஏலக்காய் – 2, கல்பாசி – 3, பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – ரெண்டு, உப்பு – தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், சின்ன வெங்காயம் – 5, சோம்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், கறி மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன், புதினா மல்லி இலைகள் – ஒரு கைப்பிடி, தண்ணீர் – 100ml,

- Advertisement -

பிளைன் சால்னா செய்முறை விளக்கம்:
முதலில் கசகசா மற்றும் முந்திரி பருப்பை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள். இவை நன்கு மசிய வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள கசகசா மற்றும் முந்திரியை தண்ணீரோடு அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்க்க வேண்டும். வாசத்திற்கு சோம்பு சேர்த்து நைசாக, தண்ணீர் தேவையான அளவிற்கு ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குக்கரில் மசாலா பொருட்கள் சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கறி மசாலாத்தூள் ஆகியவற்றை மேலே கொடுத்துள்ள அளவுகளின் படி சரியாக சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பச்சை வாசம் முழுவதுமாக போக வேண்டும். பச்சை வாசம் போனதும் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ்ஷான கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கி விடுங்கள். புதினா இலைகள் சேர்க்கும் பொழுது தான் சால்னா நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இலைகள் சுருள வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

பிறகு ஒரு நிமிடம் அடி பிடிக்காமல் கிளறி விடுங்கள். இப்போது கெட்டியாக சால்னா வர வேண்டும் எனவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் ஒரு டம்ளர் அளவிற்கு சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து மூடி போட்டு ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் எதுவும் சேர்க்காததால் ஒரு விசில் போதும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி ஒரு முறை பிரட்டினால் அவ்வளவு அருமையான சூப்பரான கெட்டியான சால்னா ரெடி! இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, வெரைட்டி சாதம் என்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

- Advertisement -