சுவையான சூப் போல ‘பூண்டு மிளகு ரசம்’ இப்படி ஒரு முறை வச்சு பாருங்க வீடே மணமணக்கும் தெரியுமா?

poondu-milagu-rasam
- Advertisement -

சிலர் ரசத்தை சூப் போல குடிப்பது உண்டு, சிலர் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்ததும், கடைசியாக இருக்கும் ரசத்தை கூட விட்டு வைக்காமல் குடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு ரசத்தின் மீது பிரியம் கொண்டவர்கள் ஒரு முறை பூண்டு மிளகு ரசத்தை இப்படி வச்சு பாருங்க, வீடு மணமணக்கும் அளவிற்கு இருக்கும். ரொம்ப எளிதாக சூப் போல சுவையான ‘பூண்டு மிளகு ரசம்’ செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

‘பூண்டு மிளகு ரசம்’ செய்ய தேவையான பொருட்கள்:
புளி – சிறு எலுமிச்சை பழ அளவு, பெரிய தக்காளி – ஒன்று, பூண்டு பற்கள் – 10, மிளகு – அரை டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு, கல் உப்பு – தேவையான அளவிற்கு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

‘பூண்டு மிளகு ரசம்’ செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய தக்காளியை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். புளியை அப்படியே சேர்க்க விரும்பாதவர்கள் அதனை கரைத்து வடிகட்டி பின்னர் தக்காளி சேர்த்து கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் நீக்காமல் பூண்டு பற்களை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த விழுதையும் புளியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை சேர்த்து கைகளால் எந்த அளவிற்கு தக்காளி பழங்களை பிசைய முடியுமோ, அந்த அளவிற்கு பிசைந்து கொள்ளுங்கள். ரசத்திற்கு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ரசத்தில் உப்பு சேர்ப்பது ரொம்பவே சுவை தரும். கொஞ்சம் கறிவேப்பிலையையும் நறுக்கி சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், கொஞ்சம் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். வெந்தயம் சேர்ப்பதன் மூலம் உடல் உஷ்ணம் தணியும். பின்னர் 2 வர மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்ததும், நீங்கள் கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்கும் வரை காத்திருங்கள்.

ரசம் கொதித்து நுரை தள்ள ஆரம்பித்தவுடன், நீங்கள் இறுதியாக பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பூண்டு மிளகு ரசத்தில் இறுதியாக பெருங்காய பொடி சேர்த்தால் தான் பெருங்காயத்தூள் மணத்துடன் ரொம்பவே ரசம் சுவையாக இருக்கும். ரசத்தை அதிகம் கொதிக்க விட்டால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே இரண்டு நிமிடம் மட்டும் கொதித்தால் போதும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதே முறையில் எளிதாக பூண்டு மிளகு ரசம் வைத்து நீங்களும் அசத்துங்கள்.

- Advertisement -