பூண்டு மிளகு சாதம்

poondu milagu sadam
- Advertisement -

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு விதவிதமாக சமைத்து தர வேண்டும் என்ற ஆசை அனைத்து தாய்மார்களுக்கும் இருக்கும். அந்த ஆசையுடன் ஆரோக்கியமும் சேர்ந்திருந்தால் அதைவிட சிறப்பானது எதுவும் இருக்காது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆரோக்கியமான பூண்டை வைத்து செய்யக்கூடிய பூண்டு மிளகு சாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த மழைக்காலத்தில் தொற்று நோய்களின் பாதிப்பு என்பது அதிகரிக்கும். ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றொருவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதேசமயம் தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் குறைக்கவும் நமக்கு உதவி செய்யும் உணவு பொருளாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை போலவே மிளகும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பொருள் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து ஆரோக்கியமாக பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு இனுக்கு
  • வர மிளகாய் – 2
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 15 பல்
  • உப்பு – தேவையான அளவு
  • சாதம் – 1 1/2 கப்
  • மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்ற வேண்டும். இவை இரண்டும் காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவை மூன்றையும் சேர்த்து கடுகு நன்றாக வெடித்ததும் அதில் கருவேப்பிலை, வரமிளகாய் இரண்டையும் சேர்க்க வேண்டும்.

வரமிளகாய் சிவந்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காய தூள் இரண்டையும் சேர்க்க வேண்டும். வெங்காயம் சிறிது வதங்க ஆரம்பித்ததும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இந்த சமயத்தில் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூண்டும் வெங்காயமும் நன்றாக வதங்கிய பிறகு அதில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பிறகு மிளகுத்தூளை சேர்த்து மிளகுத்தூள் சாதம் முழுவதும் பரவும் அளவிற்கு நன்றாக கிளறிவிட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும். சுவையான ஆரோக்கியமான பூண்டு மிளகு சாதம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கொள்ளு குழம்பு

சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க வேண்டும். இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய பூண்டையும் மிளகையும் வைத்து செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான சாதத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -