கொள்ளு குழம்பு

kollu kulambu
- Advertisement -

அதிக ஆரோக்கியம் நிறைந்த பருப்பு வகைகளில் ஒன்றுதான் கொள்ளு பருப்பு. இது உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் வெயில் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் மழை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற பருப்பாக திகழ்வதால் இந்த பருப்பை வைத்து குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த பருப்பிலும் இல்லாத அளவிற்கு அதிக அளவு இரும்புச் சத்து இந்த பருப்பில் இருக்கிறது. கொழுத்தவனுக்கு கொள்ளு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த கொள்ளை உடல் எடை அதிகமாக இருப்பவர் உண்ணும் பொழுது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து விடும் என்பதுதான். உடல் உள் உறுப்புகளை பலப்படுத்தும் ஆற்றல் இந்த கொள்ளுக்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் கொள்ளு உதவுகிறது. சரி இப்பொழுது கொள்ளை வைத்து குழம்பு செய்யும் முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • வர மிளகாய் – 2
  • சின்ன வெங்காயம் – 150 கிராம்
  • பூண்டு – 6 பல்
  • தக்காளி – 3
  • கொள்ளு – 150 கிராம்
  • புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
  • கருவேப்பிலை ஒரு கொத்து
  • மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கொள்ளை சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பிறகு அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி பத்து விசில் விட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம், பூண்டு இவை இரண்டையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் சின்ன வெங்காய விழுதை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காய வாடை நீங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஊற வைத்த புளியை கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

குக்கரில் விசில் போன பிறகு அதில் இருக்கும் கொள்ளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியின் பச்சை வாடை நீங்கிய பிறகு அரைத்து வைத்த கொள்ளை அதில் சேர்த்து, கொள்ளு வேக வைத்த தண்ணீரையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இவ்வாறு கொதிக்க விடும் பொழுது அடிக்கடி இதைக் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். ஐந்து நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய மல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும். அருமையான கொள்ளு குழம்பு தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் ரசம்

உடல் உறுப்புகளை பலப்படுத்தும் இந்த அற்புதமான கொள்ளை பயன்படுத்தி நாமும் நம் இல்லத்தில் குழம்பு செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

- Advertisement -