10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத காரசாரமான இந்த வெங்காய கார சட்னியை ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இதன் ருசி நாக்கை விட்டு போகவே போகாது.

big-onion-chutney
- Advertisement -

வெங்காயம் பூண்டு சேர்த்து ஒரு விதமான காரச் சட்னியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த சட்னியை பக்குவமாக அரைத்து வைத்து விட்டால், பத்து நாட்கள் வரை கெட்டுப் போகாது. பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும். இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். இந்த சட்னியில் நாம் பூண்டு சேர்த்து அரைத்து வைப்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது. வாங்க நேரத்தை கடத்தாமல் சூப்பரான காரசாரமான இந்த சட்னி ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், சிறிய துண்டு – பெருங்காயகட்டி, வரமிளகாய் – 10, இந்த பொருட்களை எல்லாம் ட்ரை ஆக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து தோல் உரித்த 20 – பூண்டு பல் நமக்கு தேவை. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த பூண்டு பற்களை அதில் போட்டு இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு நெல்லிக்காய் அளவு – புளி, வெட்டிய பெரிய வெங்காயம் – 2, சேர்த்து வதக்குங்கள். வெங்காயத்தின் நிறம் லேசாக பிரவுன் கலர் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

மிக்ஸி ஜாரில் ஏற்கனவே மசாலா பொருட்களை வறுத்து போட்டு அரைத்து வைத்திருக்கின்றோம் அல்லவா. அதனுடன் வதக்கி வைத்திருக்கும் இந்த பூண்டு, புளி வெங்காயத்தை அதே மசாலா பொருட்களோடு போட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு சட்னி போல நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (ரொம்பவும் தண்ணீர் ஊற்ற கூடாது திக்காக தான் அரைக்க வேண்டும்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை ஊற்றி கொஞ்சமாக தண்ணீரும் சேர்த்து 1/2 ஸ்பூன் – வெல்லம் சேர்த்து இதை நன்றாக எண்ணெயிலேயே வதக்க வேண்டும். ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் சட்னியை வதக்கி அடுப்பை அணைத்தால் சூப்பரான வெங்காயம் பூண்டு கார சட்னி தயார்.

இந்த சட்னியை ஒரு தண்ணீர் படாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து நாட்கள் கெட்டுப் போகாது. இட்லி தோசைக்கு சைடிஷ் பிரச்சனையே இல்லை. சாப்பிடுவதற்கு சுவையும் அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்கள் வேணும்னா இந்த சட்னி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -