4 பொருள் இருந்தா போதும் 4 நிமிஷத்துல இப்படி ஒரு பூசணிக்காய் கூட்டு செஞ்சி பார்க்கலாமே!

poosanikai-koottu2
- Advertisement -

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 5 நிமிஷத்துல அட்டகாசமான ஹோட்டல் சுவையில் பூசணிக்காய் கூட்டு எப்படி செய்வது? காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த பூசணிக்காய் கூட்டு செய்முறை விளக்கத்தை இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vellai-poosanikkai

பூசணிக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய பூசணிக்காய் – 2 கப், தேங்காய் துருவல் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சர்க்கரை ஒரு ஸ்பூன். தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – சிட்டிகை அளவு.

- Advertisement -

பூசணிக்காய் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் வெண்பூசணி அல்லது மஞ்சள் பூசணி எந்த பூசணியாக இருந்தாலும் சரி பரவாயில்லை, அதன் மேல் பகுதி தோலை நன்கு சீவி விட்டு உள்ளிருக்கும் சதைப்பற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளிருக்கும் விதைகளை எல்லாம் நீக்கி விட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 2 கப் அளவிற்கு பூசணி காய்களை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

poosanikai-koottu

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். பூசணி காய்களை சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள். பூசணிக்காய் பாதி அளவு வெந்ததும் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வேக விடுங்கள். தண்ணீர் வற்றி பூசணிக்காய் உடன் இவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து வரும் பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் ஒரு கப் அளவிற்கு துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு சிறிய பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனையும் அதனுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். பச்சை மிளகாயின் பச்சை வாசம் போக கொதித்து வரும் பொழுது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் சுவை சூப்பராக இருக்கும். பிறகு கூட்டை தாளிக்க வேண்டியது தான்.

poosanikai-koottu1

அடுப்பில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வரும் பொழுது கடுகு போட்டு பொரிய விட வேண்டும். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து வறுபட்டு வரும் பொழுது பெருங்காயத் தூள் சேர்த்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை தாளித்து பூசணிக்காய் கூட்டு உடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து விட்டால் ரொம்பவே சுவையான பூசணிக்காய் கூட்டு தயாராகி இருக்கும். இதே போல நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று விடலாமே!

- Advertisement -