பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை இப்படி வித்தியாசமான சுவையில் ஒருமுறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு 10 பூரி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

potato
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஒவ்வொரு விதமான சுவையில் சைடிஷ் செய்யப்படுகின்றது. ஆனால் பெரும்பாலும் பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படுகிறது. ஏனெனில் உருளைக்கிழங்கு மசாலா தான் பூரிக்கு ஏற்ற சுவையில் இருக்கும். இதைத் தவிர வேறு எதனை சேர்த்து சாப்பிட்டாலும் அவ்வளவு சுவையாக இருக்காது. ஆனால் பாம்பே போன்ற ஊர்களில் இந்த உருளைக்கிழங்கு மசாலாவை சற்று வித்தியாசமான சுவையில் செய்வதுண்டு. இந்த வகை உருளைக்கிழங்கு மசாலாவும் பூரியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான சுவையில் தான் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4, வெங்காயம் – 3, தக்காளி – 3, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – அரை ஸ்பூன், கிராம்பு – 3, பட்டை சிறிய துண்டு – 5, சோம்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 6 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொண்டு, அதனை குக்கரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் உருளைக்கிழங்கை வெளியே எடுத்து தோலுரித்து வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். மீதமிருக்கும் இரண்டு வெங்காயத்தை சதுர வடிவில் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியையும் சேர்த்து குழைய வதக்கி விட வேண்டும். பிறகு மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதன்பின் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொண்டு, அதனையும் குழம்புடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும். சுவையான உருளைக்கிழங்கு பாஜி தயாராகிவிடும். சுடசுட பூரியுடன் இந்த உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள் அவ்வளவு சூப்பரான சுவையில் இருக்கும்.

- Advertisement -