பொட்டுக்கடலை 1/2 கப் இருந்தா போதும் சட்டுனு 10 நிமிடத்தில் டிபனுக்கு சாம்பார் வைத்து விடலாம்! சுவையான பருப்பு இல்லாத டிபன் சாம்பார் எப்படி செய்வது?

idli-sambar
- Advertisement -

சாம்பார் என்றாலே பருப்பு தான் நம் நினைவுக்கு முதலில் வரும். எந்த பருப்பு வகைகளையும் சேர்க்காமல், சட்டுனு பத்து நிமிடத்தில் மணக்க மணக்க, அருமையான டிபன் சாம்பார் இப்படி செஞ்சு கொடுத்தா, இன்னும் ரெண்டு இட்லி தாராளமாக உள்ளே செல்லும். அந்த அளவிற்கு நல்ல சுவையான மற்றும் எளிதான பொட்டுக்கடலை சாம்பார் எப்படி நம் வீட்டிலேயே நம் கையால் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

பொட்டுகடலை டிபன் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
உடைத்த கடலை – அரை கப், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வரமிளகாய் – 6, பூண்டு பற்கள் – 6, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சாம்பார் பொடி – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

பொட்டுகடலை டிபன் சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் பொட்டுகடலை சாம்பார் செய்வதற்கு அரை கப் அளவிற்கு பொட்டுக் கடலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பவுடருடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்கு நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகத்தை போட்டு பொரிய விடுங்கள். இவை தாளித்ததும் உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கிள்ளி சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலை இலைகளை உருவி சேருங்கள்.

- Advertisement -

இவற்றை லேசாக வதக்கி விட்ட பின்பு நீங்கள் சிறு பூண்டு தோலுரித்து லேசாக இடித்து சேருங்கள். இதன் மணம் வீட்டையே சுற்றிவரும், அவ்வளவு நன்றாக இருக்கும். பிறகு பெரிய வெங்காயம் ஒன்றை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதங்கி வரும் பொழுது, வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். இவை சீக்கிரம் வதங்க அரை ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி மசிய வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்து அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு கலந்து விடுங்கள். இவற்றின் பச்சை வாசனை போக நன்கு கலந்து விட்டதும், தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் கரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை தண்ணீரை ஒரு முறை நன்கு கலந்து இதனுடன் சேர்த்து ஒன்றரை முதல் இரண்டு கப் அளவிற்கு தண்ணீரை உங்கள் தேவைக்கு ஏற்ப ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து இலேசாக கெட்டியானதும் நறுக்கிய மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இதை சுடச்சுட இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -