காலை மற்றும் இரவு பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பிக்கு பொட்டுக்கடலை தக்காளி சட்னி 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?

thakkali-pottukadalai-chutney
- Advertisement -

காலை மற்றும் இரவு சிலர் பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பிக்கு என்னடா சட்னி அரைப்பது? என்று யோசிப்பார்கள். சட்டுனு பத்து நிமிஷத்தில் ரொம்பவே சுவையாக இருக்க கூடிய இந்த பொட்டுக்கடலை தக்காளி சட்னி அரைத்து கொடுத்து பாருங்க வித்தியாசமாக இருக்கும். எல்லா வகையான டிஃபன் ரெசிபிக்கு சுவையான பொட்டுக்கடலை தக்காளி சட்னி பத்து நிமிடத்தில் எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பொட்டுக்கடலை தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3, வர மிளகாய் – 3, பூண்டு பற்கள் – 3, கொத்தமல்லி – சிறிதளவு, பொட்டு கடலை – 2 டீஸ்பூன், தேங்காய் – அரை கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், இடித்த பூண்டு பல் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

பொட்டுக்கடலை தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
பொட்டுகடலை தக்காளி சட்னி செய்ய முதலில் 15 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு பெரிய வெங்காயம் சேர்ப்பதை விட சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும். பின்னர் மற்ற பொருட்களை எடுத்து வைத்து தேவையானவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

இதனுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் சேர்த்து வதக்குங்கள். மூன்று பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். இவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். இந்த சமயத்தில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும். தக்காளி ஓரளவுக்கு மசிய வதங்கி வரும் பொழுது, சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

இப்போது துருவி வைத்துள்ள தேங்காய் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதிகம் வதங்கக் கூடாது. அதற்குள் அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சிறு தாளிப்பு இப்போது கொடுக்க வேண்டும். சட்னி அரைத்த பின்பு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் பூண்டு பல்லை தோலுடன் இடித்து அப்படியே சேர்த்துத் தாளியுங்கள். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உருவிப் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதை பொட்டுக்கடலை தக்காளி சட்னியுடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி இட்லி, தோசை, ஊத்தாப்பம், ஆப்பம், போண்டா, பஜ்ஜி என்று எல்லா வகையான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிக்கும் தொட்டுக் கொள்ள சூப்பராக காம்பினேஷனாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, அசத்துங்க.

- Advertisement -