டக்குனு 10 நிமிடத்தில் சூப்பரான இன்ஸ்டன்ட் இட்லி டிபன் சாம்பார் வைப்பது எப்படி? இந்த சாம்பாரின் சுவை சாப்பிட்ட பின்பும் நாக்கை விட்டு போகாது.

sambar
- Advertisement -

துவரம் பருப்பை வைத்து வைக்கக்கூடிய ஒரு சாம்பார் தான் இது. ஆந்திர பக்கத்தில் இந்த சாம்பாரை வைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் வைக்கக்கூடிய சாம்பார் போல இருந்தாலும், இதில் கொஞ்சம் வித்தியாசம் தெரியும். இந்த சாம்பாருக்கு ஒரு தனி சுவை இருக்கும். சுடச்சுட இட்லி தோசை பொங்கல் பணியாரத்துடன் வைத்து சாப்பிடும் போது ரொம்பவும் சூப்பராக இருக்கும். வாங்க கொஞ்சம் வித்தியாசமான இந்த சாம்பாரை டக்குனு எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

முதலில் 1/2 கப் அளவு துவரம் பருப்பை கழுவி விட்டு தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த துவரம் பருப்பு – 1/2 கப், நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பருப்பும் காயும் நன்றாக வெந்து வந்தவுடன் ஒரு மத்தை வைத்து லேசாக ஒன்றும் இரண்டுமாக மசித்து கொள்ளுங்கள். குக்கரில் வெந்த பருப்பு காய் அப்படியே இருக்கட்டும். (இந்த மஞ்சள் பூசணியை சில பேர் பரங்கிக்காய் என்றும் சொல்லுவார்கள். டிபன் சாம்பாருக்கு இந்த காய் சேர்ப்பது அதிக ருசியை கூட்டிக் கொடுக்கும்.)

அடுத்தபடியாக சிறிய தாளிப்பு கரண்டியில் வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மணக்க மணக்க வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு இந்த மூன்று பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த பொடியை அப்படியே குக்கரில் இருக்கும் சாம்பாரில் போட்டு விடுங்கள். சாம்பாரை அடுப்பில் வையுங்கள் லேசாக கொதிக்கட்டும்.

அதற்குள் சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 1, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு தாளித்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் போல கொதிக்க விட்டால் சூப்பரான சாம்பார் தயார். சுட சுட இட்லிக்கு இந்த சாம்பாரை தொட்டு சுவைத்து பாருங்கள். இதனுடைய சுவை நாக்கிலேயே ஒட்டிக்கொள்ளும். இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி பரிமாறுங்கள் அவ்வளவு தான்.

- Advertisement -