நாளைய புரட்டாசி மாத கடைசி ஏகாதசி ரமா ஏகாதசி அல்லது ராம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் செல்வத்தையும், வளமையையும் அருளும் அன்னை லட்சுமி தேவியுடனும் (ரமா) மற்றும் பெருமாளுடனும் தொடர்புடையது. அரச வாழ்க்கைக்கு சமமான பலனைத் தரக்கூடியது என்று ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது. இதன் வழிபாடு முறை மற்றும் ஆன்மீகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
புரட்டாசி கடைசி ஏகாதசி வழிபாடு முறை:
நாளை இந்த வருடம் புரட்டாசி மாதம் கடைசி ஏகாதசி ஆகும். இந்த ரமா ஏகாதசி அன்று பகவான் விஷ்ணுவையும், செல்வத்தின் அதிபதியான அன்னை மஹாலட்சுமி தேவியையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறந்தது. ஏகாதசி திதி தொடங்கும் நாளான இன்று (தசமி திதி முடிவு பெறும் நேரத்தில்) இருந்தே விரதத்தைத் தொடங்கலாம். நாளை ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பெருமாளை மனதில் நினைத்து விரதம் இருக்க சங்கல்பம் அதாவது உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்து, பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் திருவுருவப் படங்களை அல்லது விக்ரகங்களை வைத்து அலங்கரிக்கவும். விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்கவும். துளசி இலையால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது. ஒரு கலசத்தில் சுத்தமான நீர் நிரப்பி, அதில் சிறிதளவு பச்சை கற்பூரமும், ரெண்டு கிராம்பு, ரெண்டு ஏலக்காய், கொஞ்சம் துளசி இலைகளையும் சேர்த்து தீர்த்தம் தயார் செய்து வையுங்கள். சாமந்திப் பூக்கள் மற்றும் மஞ்சள் நிறப் பூக்களால் அலங்கரிக்கலாம். பால், பழங்கள், பஞ்சாமிர்தம் போன்றவற்றை நிவேதனம் செய்யலாம்.
வெங்கடேச சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது மற்ற விஷ்ணு ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். நாள் முழுவதும் உபவாசம் இருந்து உணவைத் தவிர்த்து, நீர் அருந்தாமலோ அல்லது பழங்கள், பால் மட்டும் அருந்தியோ விரதம் இருக்கலாம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். நம் உடலை வருத்திக் கொண்டு எந்தவிதமான விரதத்தையும் மேற்கொள்ள ஆன்மீகம் வலியுறுத்துவதில்லை.
“ஓம் நமோ நாராயணாய” அல்லது “ஹரே கிருஷ்ணா மகாமந்திரம்” போன்ற விஷ்ணு மந்திரங்களை நாள் முழுவதும் ஜெபிக்கலாம். இரவு முழுவதும் கண் விழித்து இறைவன் சன்னதியில் நாம ஜெபம் செய்வது அல்லது பக்திப் பாடல்களைப் பாடுவது சிறந்தது. ஏகாதசிக்கு மறுநாள், துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்யும் போது காலை நேரத்தில் நீராடி பெருமாளை வணங்கி, அன்னதானம் செய்த பின், விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
தீர்க்க சுமங்கலி யோகத்தை தரும் கேதார கௌரி விரதம்
இந்த புரட்டாசி கடைசி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், அரசனுக்கு இணையான வாழ்வு, செல்வச் செழிப்பு, பாவங்களில் இருந்து விடுதலை, மோட்சம் ஆகியவை கிட்டும் என்பது நம்பிக்கை. இதுவரை விரதம் இருக்க முடியாதவர்களும், இந்த ஒரு நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வர, ராஜ வாழ்க்கைக்கு உரிய வரங்களை பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு புராண கதையும் உண்டு, அடுத்து வரும் பதிவில் அதனை காண்போம்.