ரேஷன் பச்சரிசியில் மொறுமொறு தோசை செய்ய ஒரு முறை மாவை இப்படி அரைத்துப் பாருங்கள். மிக்ஸி ஜாரில் மாவு அரைத்தால் கூட போதும். சூப்பரான ஹோட்டல் தோசை தயார்.

dosai
- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய வீட்டில் செய்யும் தோசை மொறுமொறுவென ஹோட்டல் தோசை போல இருக்காது. ரேஷன் பச்சரிசியில் பின் சொல்லக் கூடிய அளவுகளில் பக்குவமாக மாவு அரைத்து எடுத்துக் கொண்டால் போதும். சூப்பரான ஹோட்டல் தோசை நம் வீட்டிலேயே கிடைக்கும். பெரும்பாலும் நம் வீடுகளில் வாங்கும் ரேஷன் பச்சரிசியை நாம் பயன்படுத்துவது கிடையாது. ஆனால் ஒரே ஒரு முறை அந்த பச்சரிசியை தோசைக்கு பயன்படுத்தி பாருங்கள். ரேஷன் அரிசியை அனாவசியமாக வீணாக்க வேண்டாம். சூப்பரான சுவையான ரேசன் பச்சரிசி தோசை ரெசிபி உங்களுக்காக.

dosai

ரேஷன் பச்சரிசி – 2 டம்ளர், உளுந்து – 1/4 டம்ளர், கடலைப் பருப்பு – 1/4 டம்ளர், அவல் – 1/2 டம்ளர், வெந்தயம் – 1/2 ஸ்பூன். நமக்கு இந்த அளவுகளில்தான் பொருட்கள் தேவைப்படும். எந்த டம்ளரில் பச்சரிசியை அளக்கிறீர்களோ அதே தம்ளரில் மற்ற பொருட்களையும் அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் ரேசன் பச்சரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், இந்த 4 பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ரேசன் பச்சரிசி சில சமயங்களில் சுத்தமாக நமக்கு கிடைக்காது. அதை முன்பே நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக இந்த நான்கு பொருட்களையும் கைகளால் அலசி 4 முறை கழுவிய பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள்.

proteit-dosa2

மாவு அரைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்பு அவலை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் போதும். இப்போது ஊறி இருக்கும் இந்த எல்லா பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் மொழுமொழுவென மாவை அரைக்கக் கூடாது. ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க கூடாது. சிறிய ரவை பதத்தில் லேசான நறநறபுடன் அரைத்துக் கொண்டால் போதும். அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இந்த மாவில் உப்பு போட்டு உங்க கையை கொண்டு நன்றாக கரைத்து மூடி போட்டு வைத்து விடவேண்டும்.

- Advertisement -

குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை எப்போதும் போல இந்த மாவு புளித்து வரட்டும். மறுநாள் காலை மாவை நன்றாக கரண்டியை வைத்து கலக்கி விட்டு, மாவு கட்டியாக இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளவேண்டும். தோசைக்கல்லின் மேல் தண்ணீரை தெளித்து ஒரு காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்துவிட்டு, அதன் பின்பு எப்போதும் போல மெல்லிசாக தோசை வார்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை வார்க்க வேண்டும். மிதமான தீயில் தான் தோசையும் சிவக்க வேண்டும்.

dosai1

தோசைக்கு மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்றாக சிவக்க வைத்து திருப்பி போட வேண்டாம். தோசை சிவந்து வந்ததும் அப்படியே சுருட்டி குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுத்து பாருங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். ஹோட்டல் தோசை போல சுவையாகவும் இந்த தோசை நமக்கு கிடைக்கும். இதில் நாம் பச்சரிசி மட்டும் சேர்த்திருப்பதால் அடுப்பு தீயை முழுமையாக வைத்து தோசை வார்த்தால் உடனே கருகி விடும். ஜாக்கிரதை, உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -