1 கப் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தா போதும் பூப்போல இடியாப்பம் வீட்டிலேயே செய்ய முடியும் தெரியுமா? சுவையான புழுங்கல் அரிசி எப்படி செய்வது?

puzhungal-arisi-idiyappam
- Advertisement -

பொதுவாக இட்லி, இடியாப்பம் செய்வதற்கு பச்சரிசி பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால் ரேஷன் கடையில் கொடுக்கும் புழுங்கலரிசியை வைத்து கூட ரொம்ப சூப்பரான பூப்போன்ற மெத்தென்று இருக்கக்கூடிய இடியாப்பத்தை தயாரிக்க முடியும். இதற்கு ரேஷன் புழுங்கல் அரிசியை எப்படி சுத்தம் செய்வது? பின் மாவை எப்படி இடியாப்பம் செய்வது? போன்றவற்றை சுலபமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு கப் அளவிற்கு புழுங்கலரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல், குருணை, கருப்பு அரிசி போன்றவற்றை எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை 5 லிருந்து 6 முறை நன்கு தண்ணீர் ஊற்றி தண்ணீர் வெள்ளை வெளேரென்று வருமளவிற்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின் இந்த அரிசியில் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும். 5 மணி நேரத்திற்கு பிறகு நன்கு அரிசி ஊறி இருக்கும். பின்னர் ஈரப்பதம் இல்லாமல் ஒரு வெள்ளை காட்டன் துணியை விரித்து வெயிலில் அல்லது நிழலில் 5 மணி நேரம் நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உலர்வான இந்த புழுங்கல் அரிசியை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த மாவினை சிறிய கண் உள்ள மாவு சலிக்கும் சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்துக் கொள்ளுங்கள். பச்சரிசி ரொம்ப சுலபமாக அரைபட்டு விடும். ஆனால் புழுங்கல் அரிசி அவ்வளவு சுலபமாக அரைபடாது. பச்சரிசியை காட்டிலும் புழுங்கலரிசி ரொம்பவே சுவையாக இருக்கும். எனவே சலித்து ஒரு முறை மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு 5 நிமிடம் லேசாக சூடு ஏற்றிக் கொள்ளுங்கள்.

மாவு சூடாக இருக்கும் பொழுது இன்னும் நைஸாக அரைபடும். எனவே மாவை வறுத்து பின்னர் மீண்டும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்தால் காசு கொடுத்து கடையில் வாங்கும் மாவு போலவே வெள்ளை வெளேரென்று சூப்பரான அரிசி மாவு கிடைத்து விடும். இந்த மாவினை ஆறு மாதத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து ஏர் டைட் கன்டெய்னரில் ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். பின் அடுப்பில் வைத்து இடைவிடாமல் மிதமான தீயில் வைத்துக் கொண்டு கிண்டி விட வேண்டும். இடியாப்ப மாவு பதத்திற்கு கெட்டியான மாவாக திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து முழுமையாக ஆற விட்டு விடுங்கள். ஆறிய இந்த மாவை இடியாப்பம் பிழியும் பாத்திரத்தில் இட்டு பூ போல இடியாப்ப பாத்திரம் அல்லது இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல ஒவ்வொரு குழியிலும் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் ரொம்பவே சீக்கிரமாக இடியாப்பம் பூ போல வெந்துவிடும். அதற்கு மேல் வேக வைக்க வேண்டாம். பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு சுடசுட தேங்காய் பாலுடன் பரிமாறி பாருங்கள். ஹோட்டலில் கொடுப்பது கூட இவ்வளவு சாஃப்டாக இருக்காது. ரேஷன் அரிசியில் ரொம்பவே சுலபமாக சுவையான ஆரோக்கியமான இடியாப்பத்தை நம் வீட்டிலேயே இப்படி தயாரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -