ரேஷன் துவரம் பருப்பில், இட்லி சாம்பார் இப்படி வைத்தால், அச்சு அசல் ஹோட்டல் சாம்பார் போலவே வரும். இந்த சாம்பாரில் நாம் கலக்கப்போகும் அந்த 1 ரகசிய பொருள் என்ன?

idly-sambar
- Advertisement -

பெரும்பாலும் நிறைய பேர் ரேஷன் பருப்பில் சாம்பார் வைப்பதற்கு விரும்ப மாட்டார்கள். காரணம் ரேஷன் பருப்பில் சாம்பார் வைத்தால் திக்காக சுவையாக வராது என்பது தான். ஆனால் ரேஷன் பருப்பிலும் திக்காக சுவையாக சாம்பார் வைக்க முடியும். அது எப்படி என்பதைப் பற்றித் தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் 1 கப் அளவு ரேஷன் துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துவரம்பருப்பை ஒருமுறை கழுவினால் போதாது. நான்கிலிருந்து ஐந்து முறை இதில் இருக்கும் தூசுகள் அனைத்தும் நீங்கும் படி கழுவிக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்திருக்கும் பருப்பை குக்கரில் போட்டு 1 கப் துவரம் பருப்புக்கு, 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இட்லி சாம்பாருக்கு பருப்பு நன்றாக குழைந்து வேக வேண்டும். பருப்பு இலை இலையாக இருந்தால் இட்லி சாம்பார் சரியாக வராது.

- Advertisement -

இப்போது குக்கரில் வேக வைத்த பருப்பு தயாராக உள்ளது. அந்த வேகவைத்த பருப்பில் சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், மீடியம் சைஸ் தக்காளி – 2 பொடியாக நறுக்கியது, சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை ஒரு கொத்து, முருங்கைக்காய், கேரட், கத்தரிக்காய், இந்த 3 காய்கறிகளையும் நறுக்கி தேவையான அளவு இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு சாம்பார் காரமாக தேவைப்பட்டால் 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூளையும் இந்த சாம்பாருடன் போட்டு கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம்.)

sambar2

இப்போது குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வைத்தால், உள்ளே போட்ட வெங்காயம் தக்காளி காய்கறி வகைகள் அனைத்தும் நன்றாக வெந்திருக்கும். இப்போது நமக்கு முக்கால்வாசி சாம்பார் தயாராகிவிட்டது. விசில் வரும் போதே வாசமும் அட்டகாசமாக வரும்.

- Advertisement -

ஆனால் இந்த சாம்பாரை நாம் ரேஷன் பருப்பில் வைத்திருக்கின்றோம். அந்த அளவிற்கு சாம்பார் திக்காக நமக்கு கிடைத்திருக்காது. காய்கறிகள் வெந்து தயாராக இருக்கும் இந்த சாம்பாரில் ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு ‘இட்லி மாவு’ அல்லது ‘தோசை மாவை’ ஊற்றி நன்றாக கலந்து விட்டு, சாம்பாரை அடுப்பில் வைத்து 3 லிருந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

sambar1

என்ன இட்லி மாவை சாம்பாரில் ஊற்றுவதா? என்று பயப்பட வேண்டாம். தைரியமாக இட்லி மாவை சாம்பாரில் ஊற்றி கொதிக்க வைத்து, அதன் பின்பு அந்த சாம்பாரை பரிமாறி பாருங்கள். நிச்சயமாக வித்தியாசம் தெரியும். (நிறைய மாவை ஊற்றி விட வேண்டாம். 4 டேபிள் ஸ்பூன் அளவு மாவை ஊற்றினால் போதும்.)

idly-maavu

இப்போது மாவு ஊற்றி அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த சாம்பாருக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 4 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு – 1 ஒரு ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 2, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் (சின்ன சைஸ் வெங்காயம் போதும்) – 1, கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து முதலில் வதக்க வேண்டும். இறுதியாக 1/4 ஸ்பூன் தனி மிளகாய் தூள் இந்த எண்ணெயில் போட்டு 30 செகண்ட்ஸ் வரை வறுத்து உடனடியாக இதை அப்படியே கொதித்துக் கொண்டு இருக்கும் சாம்பாரில் கொட்டி விட வேண்டும்.

Sambar

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை இந்த சாம்பாரின் மீது தூவி விடுங்கள். அடுப்பை அணைத்துவிடுங்கள். தாளிக்கும் இந்த எண்ணெயில் மிளகாய் தூளை போட்டு சாம்பார் மீது கொட்டினால், எண்ணெயும் மிளகாய்த் தூளும் சாம்பாரின் மேலே மிதக்கும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள். அட்டகாசமான சாம்பார் தயார்.

- Advertisement -