வரப்போற தீபாவளிக்கு வெறும் 15 நிமிடத்தில் மொறு மொறுன்னு சூப்பரா முறுக்கு சுட்டு அசத்துங்க. கடையில் வாங்கிய அரிசி மாவு இருந்தாலே போதும்.

murukku
- Advertisement -

முறுக்கு செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லைங்க. முறுக்கு செய்வதற்கு தேவையான எல்லா மாவையும் கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொண்டால், அதில் அட்டகாசமான முறுக்கு சுட்டு எடுத்து விடலாம். எல்லாப் பொருட்களும் இப்போது நமக்கு ரெடிமேடாக கடையிலேயே கிடைக்கின்றது. அரிசி வாங்கி, உளுந்து வாங்கி அரைத்து முறுக்கு செய்வதெல்லாம் அந்த காலம். அந்த அளவிற்கு நேரம் நம்மிடம் இப்போது கிடையாது. அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அவசர அவசரமாக சட்டென ரெடிமேட் மாவை வைத்து எப்படி முறுக்கு சுடுவது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

muruku1

கடையில் விற்கும் இடியாப்ப மாவு, கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு, இதில் எதை வாங்கி வேண்டுமென்றாலும் நாம் முறுக்கு சுட்டு கொள்ளலாம். தவறு கிடையாது. வாங்கிய மாவை  சலித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் போதும். (புட்டு மாவில் மட்டும் முறுக்கு செய்ய கூடாது.)

- Advertisement -

உளுந்த மாவு தற்போது நமக்கு கடைகளிலேயே கிடைக்கின்றது. உளுந்து மாவாக கிடைத்தால் அதை நீங்கள் கடைகளில் இருந்து வாங்கி, மாவை லேசாக கடாயில் போட்டு சூடு படுத்தி, அதன் பின்பு முறுக்கு செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் உளுந்தம் பருப்பை சிவக்க பொன்னிறமாக வாணலியில் போட்டு வறுத்து விட்டு, உளுந்தை நன்றாக ஆற வைத்து விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து இந்த உளுந்த மாவை சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

murukku2

ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரிசி மாவு – 2 கப், உளுந்து மாவு – 1/4 கப், எள்ளு – 1 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பெருங்காயப் பொடி – 1/4 ஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சேர்த்து முதலில் இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இறுதியாக எண்ணெயை கொதிக்க கொதிக்க சூடு செய்து 2 டேபிள்ஸ்பூன் எடுத்து மாவில் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் முறுக்கு மொறுமொறுவென நமக்கு கிரிஸ்பியாக கிடைக்கும். தயாராக இருக்கும் இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு தேன்குழல் முறுக்கு செய்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

muruku2

முறுக்கு அச்சில் போட்டு கரண்டியில் மேலே பிழியும்போது உடையாமல் நமக்கு மாவு வெளிவரவேண்டும். மாவு பிழியும் போது, உடைந்தால் பிசைந்த முறுக்கு மாவு ரொம்பவும் கட்டியாக இருப்பதாக அர்த்தம். இன்னும் கொஞ்சம் தண்ணீரை தெளித்து மாவை பிசைந்து மறுபடியும் முறுக்கு அச்சில் பிழிந்து பாருங்கள். நிச்சயம் சரியான பக்குவத்தில் கிடைக்கும்.

muruku4

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து, முறுக்கை பிழிந்து அந்த எண்ணெயில் போட்டு சிவக்க விட வேண்டும். முறுக்கின் சிட சிடப்பு அடங்கும் வரை மிதமான தீயில் சுட்டு எடுத்துப் பாருங்கள். இந்த தீபாவளிக்கு சூப்பரான முறுக்கு தயார்.

muruku_2

தேவைப்பட்டால் இந்த முறுக்கு மாவு பிசையும்போது உளுந்த மாவுடன் சேர்த்து, 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் இதன் ருசி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பொட்டுக்கடலை மாவு சேர்க்காமலும் செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த தீபாவளியை எல்லோரும் சந்தோஷமா கொண்டாடுங்க.

- Advertisement -