குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் என்று சொல்லலாம். அது போலத்தான் குழந்தைகளுக்கு எவ்வளவு விதவிதமான உணவுகளை வீட்டிலேயே மிகவும் சுவையாக சமைத்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவது என்னவோ ஹோட்டல் உணவுகளை தான். ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் காரம் குறைவாகவும், சற்று இனிப்பு சுவையுடனும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இருக்கும். ஆனால் ஓட்டலில் செய்யப்படும் உணவுகளின் சுவையை கூட்டுவதற்காக அவற்றில் சில வேதியல் பொருட்கள் கலக்கப்படுவதால் அதிகப்படியான ஹோட்டல் உணவுகள் குழந்தைகள் உடல்நலத்திற்கு ஏதுவாக இருக்காது. எனவே அவர்கள் விரும்பும் அதே சுவையில் வீட்டிலேயும் அதே மாதிரியான உணவுகளை சமைத்துக் கொடுப்பது மிகவும் சுலபமான விஷயம் தான். அப்படி ரெஸ்டாரன்டில் செய்யக் கூடிய அதே சுவையிலான தேங்காய்ப்பால் சாதத்தை எப்படி வீட்டில் செய்ய முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு டம்ளர், தேங்காய் – அரை மூடி, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பிரியாணி இலை – 2, பட்டை சிறிய துண்டு – 2, நட்சத்திர பூ – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2.
செய்முறை:
முதலில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இரண்டு முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள ஸ்டார்ச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும். எனவே இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிய பின்னர் தண்ணீர் ஊற்றி அரிசியை ஊற வைக்க வேண்டும்.
பிறகு அரை மூடி தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவற்றை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி தேங்காய் பாலை வடித்து எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி தேங்காயை அரைத்துக் கொண்டு இரண்டாம் தேங்காய்ப் பால் எடுக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, நட்சத்திர பூ சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அவற்றுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு மூடி போட்டு மூட வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் வர ஆரம்பித்ததும் விசில் போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து 7 நிமிடம் வேக வைத்த பின்னர் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சுவையான தேங்காய் பால் சாதம் தயாராகிவிட்டது.