10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் விண்ணில் பிரகாசமாக இன்று காட்சி அளித்தது. தமிழகத்தைப் பொருத்தவரை திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்று கூறப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, இலங்கை போன்ற இடங்களிலும் இந்த அரிய நிகழ்வை காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

surya-grahan

இன்று காலை 8 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் பின்னர் கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தெளிவாக காட்சி அளித்தது. சென்னையில் பகுதி அளவு சூரிய கிரகணம் தென்பட்டது. இவ்வரிய சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர் எனவே சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென பிரத்தியேகமாக மூன்று தொலைநோக்கிகள் தயார் நிலையில் இருந்தன. பொதுமக்களுக்கு இது குறித்த தெளிவான தகவல்களை அளிப்பதற்கு பணியாளர்களை சிறப்பாக பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 solar-filter

இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கிய சூரியகிரகணம் 11.17 வரை நீடித்தது. சில இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தெளிவாக காட்சியளித்தது பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Grahanam

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிகவும் தெளிவாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் காட்சி அளித்தது சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. அடுத்த சூரிய கிரகணம் 2031, 21 மே மாதம் நிகழ இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
ஜியோவில் பழைய சலுகை விலைக்கே ரீசார்ஜ் செய்ய முடியும் தெரியுமா?