ரோஜா செடி வளர்க்க ஆசையா? இத தெரிஞ்சி வச்சிக்கோங்க, உங்க செடியும் கொத்துக் கொத்தாக பூத்து தள்ளும்!

rose-plant-cut
- Advertisement -

செடி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் முதலில் தேர்ந்தெடுப்பது என்னவோ பூச்செடியாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ரோஜா செடி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு செடியாக இருக்கும். இந்த ரோஜா செடியை வளர்க்க விரும்புபவர்கள் முதலில் தொட்டியில் மண்ணை நிரப்புவதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு செடியும் கொத்துக் கொத்தாக பூக்க இதையும் தெரிஞ்சுக்கலாமே!

முதலில் மண் கலவை பாதி மற்றும் ‘கோகோ பீட்’ எனப்படும் தேங்காய் நார் கலவை பாதி என்று சேர்ப்பது ரோஜா செடிக்கு நல்ல ஊட்டசத்து கொடுக்கும் ஒரு மண் கலவை ஆகும். நீங்கள் செடி வைக்க ஏற்பாடு செய்து வைத்துள்ள தொட்டியில் பாதி அளவிற்கு மண்ணும் மீதி அளவிற்கு தேங்காய் நாரை நன்கு காய வைத்து பொடியாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது நர்சரிகளில் வாங்கியும் சேர்க்கலாம். இரண்டையும் கலந்து ரோஜா செடியை நட்டு வையுங்கள். 10 நாட்களில் செடி துளிர் விட்டு முளைக்க ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

பின்னர் இந்த ரோஜா செடியில் ஒரு கிளையில் சில ரோஜா பூக்கள் முளைத்ததும் பூக்களைப் பறிக்க மனமில்லாமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மற்ற சில கிளைகள் வராமல் போய்விடும். எனவே செடிகளில் பூக்கும் பூக்கள் முதிர்ந்த பின் அவ்வபோது பறித்து விட வேண்டும். மேலும் அதிகம் பூத்த கிளைகளை வெட்டி விட வேண்டும் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அப்போது தான் புதிய கிளைகள் தடையின்றி வளரும்.

காய்ந்த இலைகள், பூச்சி அரித்த இலைகளுக்கு வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். மேலும் அதனையும் அவ்வபோது நீக்கி சுத்தம் செய்து விட வேண்டும். தண்ணீர் அதிகம் தேங்கும் போது மண், பச்சை நிறத்தில் பாசி பிடித்தது போல மாறி விட்டால் அதனை கிளறி விட்டு மண்ணை தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மண்ணுக்கு ஆக்சிஜன் கிடைத்து செடிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.

- Advertisement -

செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்க நீங்கள் பெரிதாக காசு கொடுத்து செலவு செய்து உரம் வாங்கி போட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக முட்டை ஓட்டை தூள் செய்து போடலாம். அதைப் போல வெங்காயத் தோல், காய்கறி கழிவுகளையும் பயன்படுத்தலாம். டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதன் மிஞ்சிய தேயிலை தூளை வெயிலில் உலர்த்தி அதையும் உரமாக போடலாம். செடிகள் நன்கு அடர்த்தியான பூக்களை கொடுக்கவும், பூக்களின் நிறம் அடர்த்தியாக இருக்கவும் பீட்ரூட் தோல், தர்பூசணி தோல் போன்றவற்றை உரமாக இடலாம் அல்லது அரைத்து அதை தண்ணீரில் கலந்தும் சேர்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் நீங்கள் உருளைக்கிழங்கு வேக வைத்து அதன் தோல் பகுதியை தூக்கி எறிந்து விடாமல் அதனை உங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு போட்டு பாருங்கள், ரொம்பவே சூப்பராக செடிகள் பூத்துக் குலுங்கும். மண்புழு விவசாயத்திற்கு சிறந்த நண்பன் என்று கூறக் கேட்டிருப்போம் எனவே மாதம் ஒரு முறையாவது மண்புழு உரம் வாங்கி போடுவது ரொம்பவே சிறப்பான பலன்களை கொடுக்கும். அவ்வபோது தண்ணீரை தெளித்து, மண்ணை ஈரப்பதத்துடன், நல்ல காற்றோட்டத்துடன் வைத்து இவ்வகையில் பராமரித்து வந்தாலே கொத்துக் கொத்தாக பூக்களை அள்ளலாம்.

- Advertisement -