ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?

ruthratcham

இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் என பல வகைகள் உள்ளன. இக்காலங்களில் நாகரீகம் என கருதி பலரும் தங்கள் கழுத்திலும், கைகளிலும் ருத்ராட்சங்களை அணிகலனாக அணிந்து கொள்கின்றனர். ஆனால் தெய்வீக ஆற்றல் நிரம்பிய இந்த ருத்ராட்சங்களை அணிவதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அவை என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2-muka-rudraksham

மிக பழங்காலம் முதலே தமிழகத்தில் சிவபெருமானை முதல்கடவுளாக வழிபடும் சைவ சமய அடியார்களின் அடையாளங்களில் ஒன்றாக ருத்திராட்சம் இருந்து வந்துள்ளது. தினமும் இரண்டு வேளை குளித்து உடல் மற்றும் மன தூய்மை செய்து இறைவழிபாடு செய்பவர்கள் மட்டுமே ருத்ராட்சங்களை அணிய வேண்டும் என பொதுவான ஒரு விதி தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது. அப்படி உடல் மற்றும் மனத் தூய்மையை பேணிக்காக்காதவர்கள் ருத்ராட்சங்களை அணிவதால் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாக நேரும் என்பதற்காக இந்த விதி இன்றும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதே உடல் தூய்மை காரணத்துக்காகத் தான் முற்காலங்களில் மாதந்தோறும் உடல் ரீதியாக ஏற்படும் மாதவிடாய் முழுவதும் நின்ற, மத்திம வயதை கடந்த பெண்கள் மட்டுமே ருத்ராட்சம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

ருத்ராட்சங்களை மாலையாக அணிய விரும்புபவர்கள் ஒரு பட்டு நூலில் கோர்க்கப்பட்ட 108 எண்ணிக்கையிலான ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வதே சிறப்பானதாகும். அதிலும் இந்த 108 ருத்ராட்ச மாலையில் ஒன்பதாவதாக “பிந்து” எனப்படும் கூடுதலான ஒரு ருத்ராட்ச மணி சேர்க்கப்பட்ட மாலையை அணிவது சிறந்தது. காரணம் 108 எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்ச மாலையில் இருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அதிர்வலைகளின் தாக்கத்தை, இந்த பிந்து எனப்படும் கூடுதலாக கோர்க்கப்பட்டிருக்கும் ருத்ராட்ச மணி சமப்படுத்தி ருத்ராட்ச மாலையை அணிபவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

rudratcham-thiyanam

தங்களின் இல்லறக் கடமைகள் அனைத்தும் முடிந்து, ஆன்மீக ரீதியான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் தவ யோக வாழ்க்கை வாழ்கின்ற சிவனடியார்களின் கைகளால் ருத்ராட்ச மாலையை வாங்கி அணிந்து கொள்வது நல்லது. ருத்ராட்சத்தை ஆன்மீக காரணங்களுக்காக அணிய விரும்புபவர்கள் தங்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் மிக தூய்மையாகவும், தங்களின் எந்த ஒரு செயலும் சிவபெருமான் மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

ருத்ராட்சத்தை ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அணிந்து கொள்பவர்கள் அன்றாடம் காலைக்கடன் கழிக்க செல்வதற்கு முன்பாக ருத்ராட்சத்தை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு சென்று, பிறகு குளித்து முடித்ததும் மீண்டும் அணிந்து கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் ருத்ராட்சம் அணிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் புலால் உணவு உண்ணக்கூடாது. புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலையும் ருத்ராட்சம் அணிந்து இருக்கும் சமயம் மேற்கொள்ளக்கூடாது. ருத்ராட்சம் அணிந்து கொண்டு ஆண் – பெண் இல்லற இன்பம் துய்க்க கூடாது. ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவர்கள் பிறரை சபிக்கவும், கோபமான வார்த்தைகள் கொண்டு திட்டவோ, அடிக்கவோ கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

rudharaksha maalai

ஒரு முக ருத்திராட்சம் அல்லது எத்தனை முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் கோர்த்த மாலையை அணிந்து கொண்டாலும் அதை அணிந்து கொள்ளும் நபரை எதிர்மறை ஆற்றல்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ருத்திராட்சம் காக்கும். அனைத்து வயதினரும் அணிந்துகொள்ள தக்க வகையில் இருக்கின்ற ருத்ராட்சம் “பஞ்சமுக” ருத்ராட்சம் எனப்படும் ஐந்து முக ருத்ராட்சம் ஆகும். இந்த 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர்களின் ரத்த அழுத்தம் சமநிலை அடைந்து, மனச்சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும். சிவபெருமானை வழிபாடு செய்பவர்கள், அவரின் மந்திரங்களை துதித்து வழிபாடு செய்யும் போது ருத்ராட்ச மாலையை தங்களின் விரல்களால் உருட்டி, மந்திர ஜபம் செய்வதால் நீங்கள் விரும்புகின்ற பலன்கள் உங்களுக்கு விரைவாக ஏற்பட வழி வகை செய்யும்.