ஒருவருக்கு பாபா தரிசனம் எப்போது கிடைக்கும் ? ஓர் உண்மை சம்பவம்

sai-baba1

நாம் கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு கடவுளின் தரிசனம் கிடைக்கும். அதேபோல் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் மகான்களின் கருணையும், மகான்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். அப்படி பூர்வஜன்ம புண்ணியம் பெற்றிருந்த பக்தர் ஒருவரை, பாபா தம்மிடம் எப்படி அழைத்துக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.

Sai baba

காக்காஜி என்பவர் ‘வாணி’ என்ற ஊரிலுள்ள சப்தசிருங்கி கோயிலில் பூசாரியாக இருந்தார். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட பல சோதனைகளால், மனநிம்மதி இழந்து, அமைதியில்லாமல் இருந்தார். தனக்கு மனநிம்மதி அருளும்படி சப்தசிருங்கியிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

அவரிடம் இரக்கம் கொண்ட சப்தசிருங்கி தேவி, ஒருநாள் இரவு அவருடைய கனவில் தோன்றி, “பாபாவிடம் சென்று அவரை வணங்கினால், அமைதி கிட்டும்” என்று கூறி மறைந்தாள்.

அதுவரை பாபாவைப் பற்றி எதுவும் அறியாத காக்காஜி, சப்தசிருங்கி ‘பாபா’ என்று குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் இருக்கும் சிவபெருமான் என்று நினைத்து, த்ரயம்பகேஷ்வருக்குப் புறப்பட்டுச் சென்று அங்கே பத்து நாள்கள் தங்கினார். எனினும் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. இதனால் மேலும் வருத்தமடைந்த காக்காஜி, மீண்டும் தனது சொந்த ஊரான வாணிக்கே திரும்பி, தன் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தார்.

அவர் மேல் கருணைக் கொண்ட சப்தசிருங்கி மீண்டும் அவள் கனவில் தோன்றி, ‘தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடியில் வசிக்கும் பாபாவைத்தான்’ என்று கூறினாள்.

- Advertisement -

காக்காஜிக்கு ஷீரடிக்குச் சென்று பாபாவைத் தரிசிப்பது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், எப்படியும் ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

Sai baba tamil song

அதே தருணத்தில் ஷீரடியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது:

பாபாவின் தீவிர பக்தர் ஷாமா. அவருடைய சகோதரர் ஒரு ஜோதிடரைப் பார்த்து தங்களின் குடும்பக் கஷ்டங்களுக்கான காரணத்தைக் கேட்டார். ஜோதிடர், குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனையைச் செலுத்தாத காரணத்தால்தான், அடுக்கடுக்காகக் கஷ்டங்கள் வருகின்றன என்று தெரிவித்தார்.

அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை தெரியவந்தது.

ஷாமாவின் தாயார், ஷாமா சிறு குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், ஷாமாவின் தாயார் தன் குலதெய்வமான சப்தசிருங்கியிடம் வேண்டிக்கொண்டாள். ஷாமாவும் குணமடைந்தார். ஆனால், அவருடைய தாய், வேண்டுதலை நிறைவேற்றவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை ஷாமாவின் தாயாருக்கு மார்பில் படர்தாமரை வந்து, மார்பு முழுவதும் பரவிவிட்டது. அப்போதும் அவள், தன்னுடைய படர்தாமரை மறைந்துவிட்டால், ஒரு ஜோடி வெள்ளியினாலான தனங்களைச் செய்து சமர்ப்பிப்பதாக பிரார்த்தித்துக்கொண்டாள். அந்தப் பிரார்த்தனையையும் அவள் நிறைவேற்றவில்லை. தனது இறுதி நாள்களில் மரணப்படுக்கையில் இருக்கும்போது, சப்தசிருங்கிக்கு தான் செய்துகொண்ட வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள். காலப் போக்கில் ஷாமா அதை மறந்துவிட்டார்.

சகோதரரிடம் ஜோதிடர் சொன்னதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஷாமா, தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு ஜோடி வெள்ளி தனங்களை வாங்கிக் கொண்டு, அனைத்துக் கடவுளரின் வடிவமாகத் திகழும் பாபாவிடம் சென்றார். ஆனால், பாபா இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அவர் ஷாமாவை உடனே வாணிக்குச் சென்று சப்தசிருங்கி தாயாரை வணங்கி வரும்படி ஆணையிட்டார். பாபாவின் வார்த்தையை மீறாத ஷாமாவும் உடனே புறப்பட்டு சப்தசிருங்கியின் கோயில் அமைந்திருந்த ஊரான வாணிக்குச் சென்றார்.

Sai baba

இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மகான்களின் வார்த்தைகள் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. சாதாரண மனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்வது கடினம். அப்படித்தான் தம்முடைய பக்தரான ஷாமாவை வாணிக்குச் செல்லும்படி பாபா கூறியதிலும் அர்த்தமிருந்தது.

ஆம். பாபாவின் தரிசனத்தைப் பெற ஏங்கியிருந்த காக்காஜியின் விருப்பத்தை நிறைவேற்றவும், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்தான் பாபா இந்த அருளாடலை நிகழ்த்தினார்.

ஷாமா சப்தசிருங்கி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார், தன் தாயாரின் வேண்டுதலையும் நிறைவேற்றினார். பிறகு அங்கே பூசாரியாக இருந்த காக்காஜியிடம் தன் தெய்வமான பாபாவைப் பற்றி கூறினார். இதைக் கேட்ட காக்காஜியின் மனம் பரவசம் அடைந்தது. சப்தசிருங்கி, ‘பாபா’ என்று குறிப்பிட்டது, ஷாமா சொல்லும் ஷீரடி பாபாவைத்தான் என்பதைப் புரிந்துகொண்டார். உடனே அவர் ஷாமாவுடன் ஷீரடிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஷீரடிக்கு வந்த காக்காஜி, துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை மனம்குளிர தரிசித்தார். பாபாவைத் தரிசித்தவுடன் அமைதியில்லாமல் இருந்த அவரின் மனம் உடனே அமைதியடைந்தது. அவர் பாபாவிடம் எதுவும் பேசவில்லை. பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனாலும், அவரைத் தரிசித்த அந்த நொடியிலேயே காக்காஜி ஒருவிதப் பரவச நிலையை உணர்ந்தார். அந்த நொடியில் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர், தான் தினமும் வழிபட்ட சப்தசிருங்கி தேவிக்கு மனதார நன்றி கூறிவிட்டு, அன்று முதல் பாபாவின் தீவிர பக்தராக வாழ்ந்தார்.

இவ்வாறு பாபா எப்போது தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கத் திருவுள்ளம் கொள்கிறாரோ, அப்போதே தன் பக்தர் எங்கிருந்தாலும் அவரை தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு அருள்புரிகிறார். எல்லையற்றது பாபாவின் கருணை!

இதையும் படிக்கலாமே :
பாம்பு வடிவில் சித்தர் வந்து சாய் பாபா மீது படம் எடுத்து ஆடிய வீடியோ

இது போன்ற சாய் பாபா கதைகள் பல படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Over:
Here we have one real life story of Sai baba devotee in Tamil. Initially he was not a devotee but later he got the dharshan of Sai baba and he become the devote of Sai. Here we clearly explained how this changes happened in his life.