கறி சுவையை மிஞ்சும் அளவிற்கு சைவ கோலா உருண்டை10 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள்! இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும்.

soya-chunks-kola-urundai
- Advertisement -

மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை என்று விதவிதமாக மாமிச வகைகளில் கோலா உருண்டைகளை செய்து சாப்பிட்டவர்கள் இந்த வகையில் சைவ முறையில் கோலா உருண்டை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இது நீங்கள் சாப்பிட்ட அதே கறியின் சுவையில், இன்னும் சொல்லப் போனால் அதைவிட அலாதியான சுவையில் இருக்கக்கூடிய இந்த கோலா உருண்டை ரொம்பவும் ஆரோக்கியமானது. சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த மீல் மேக்கர் கோலா உருண்டைகளை ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

kola-urundai

மீல்மேக்கர் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – ஒரு கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், பூண்டு பற்கள் – 4, இஞ்சி – 4 துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, உடைத்த கடலை – 5 டேபிள்ஸ்பூன், முந்திரி – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புதினா இலை – ஒரு கைப்பிடி, மல்லி இலை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – 3 கொத்து, எலுமிச்சை பழம் – அரை மூடி, பெரிய வெங்காயம் – 2, கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

மீல்மேக்கர் கோலா உருண்டை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு மீல்மேக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை லிட்டர் அளவிற்கு மூழ்கும்படி சுடு தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விடுங்கள். அந்த தண்ணீரின் சூட்டிலேயே மீல் மேக்கர் வெந்துவிடும். பின்னர் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். கோலா உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவிற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு மொறு மொறுவென ஆகும்படி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

meal-maker

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு, தோல் உரித்த பூண்டு பற்கள், தோல் நீக்கிய இஞ்சி 4 துண்டு, பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றுடன உடைத்த கடலை, முந்திரி பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் ஆகிய எல்லா மசாலாக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா, அதே அளவிற்கு மல்லி, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது ஊற வைத்துள்ள மீல்மேக்கரை நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைஸாக அரைத்து விடக்கூடாது. எல்லா மீல்மேக்கரை அரைத்து எடுத்த பின்பு அரை மூடி லெமன் சாறு விட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் அரைத்த மசாலா விழுதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் மொறுமொறுவென பொரித்து எடுத்த வெங்காயத்தையும் நொறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலந்து கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

kola-urundai1

பின்னர் கோலா உருண்டைகளை செய்ய பெரிய எலுமிச்சம் அளவிற்கு உருண்டைகளை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொரித்து எடுத்த அதே எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து பின் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு உள்ளே வேகும் படி நன்கு பொறுமையாக எல்லா இடங்களும் வெந்து வர எடுத்து தட்டில் டிஷ்யூ பேப்பர் விரித்து சுட சுட பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக கறி சுவையை மிஞ்சும் அளவிற்கு நம் வீட்டிலேயே எளிதாக இதை செய்து விடலாம். நீங்களும் இதே முறையில் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -