கணவன் மனைவிக்கிடையே தொடர்ச்சியான சண்டையா? தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனையா? இதை செய்தால் போதும் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -

இந்த உலகில் நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளாக இருப்பது தாய், தந்தை, உடன் பிறந்தோர்கள் மற்றும் கணவன் – மனைவி எனும் வாழ்க்கை துணை தான். உலகில் மற்ற எந்த நபர்களுடனும் நாம் பகை, மனஸ்தாபங்கள் கொண்டாலும் மேற்கூறிய நபர்களிடம் அத்தகைய தவறுகளை செய்யாமல் அவர்களுடனான உறவை போற்றி வளர்க்க வேண்டும். எனினும் பலருக்கும் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அவர்களின் ஜாதகங்களில் இருக்கின்ற கிரகங்களின் அமைப்பினாலும், இத்தகைய நெருங்கிய உறவுகளுடன் பிணக்குகள், சண்டை சச்சரவுகள், பிரிந்து வாழ்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமான உறவுகளிடம் இருந்த பகை நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு சில ஆன்மீக பரிகாரங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மை 10 மாதங்கள் தனது கருவில் சுமந்து இந்த உலகத்திற்கு கொடுக்கும் உன்னதமான ஒரு மனித உறவு நம் ஒவ்வொருவரின் தாயார் தான். நம்மில் பெரும்பாலானோர் மற்ற எந்த உறவுகளிடம் பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் கொண்டாலும், பெற்ற தாயாரிடம் பகைமை கொள்ளாதவர்களாகவே இருப்போம். எனினும் சிலருக்கு தங்களைப் பெற்ற தாயாருடனே பகைமை, மனப் பிணக்குகள் ஏற்படுகின்றன.

- Advertisement -

தாயாருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகள் தீர்ந்து மீண்டும் சுமூகமான உறவு ஏற்பட எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை திங்கட்கிழமை தினத்தன்று தொடங்கி, அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள்ளாக மாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 21 திங்கட்கிழமைகள் செய்து வர தாயாருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், சண்டைகள் தீர்ந்து தாயாரின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

தாயார் நமக்கு உயிரை தந்தாலும் தந்தை என்பவர் தான் நமக்கு உலகில் இருக்கின்ற அனைத்தையும் கற்றுத் தரும் முதல் குரு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனினும் ஒரு சிலருக்கு தங்களை பெற்றெடுத்த தந்தையருடனே மன வருத்தங்கள், பிணக்குகள் ஏற்பட்டு அவரைப் பிரிந்து வாழும் சூழல் ஏற்படுகின்றது. தங்களை பெற்ற தந்தையருடன் ஏற்பட்ட மனப் பிணக்குகள் தீர்ந்து, மீண்டும் அவரது அன்பும் ஆசிகளும் கிடைக்க ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 27 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 ஏழு மணிக்குள்ளான சூரிய ஓரையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

“உடன் பிறப்பால் நமது உடலுக்கு பெருமை” என ஒரு பழமொழி உண்டு. எனினும் இன்று பெரும்பாலான இல்லங்களில் உடன் பிறந்தவர்களுக்கிடையே குறிப்பாக பணம், சொத்து தொடர்பான விடயங்களில் மனக்கசப்புகள் ஏற்பட்டு ஒட்டு – உறவு இல்லாத நிலை இருப்பதை நாம் சகஜமாக காண முடிகிறது.

தங்கள் உடன் பிறந்தவர்களுடனான பிரச்சனைகள் தீர்ந்து, மீண்டும் ஒற்றுமையாக வாழ நினைப்பவர்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி, அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலான செவ்வாய் ஓரை நேரத்தில் முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 27 செவ்வாய்கிழமைகள் செய்து வர உடன் பிறந்தவர்களிடையே இருந்த சண்டை சச்சரவுகள் தீர்ந்து மீண்டும் ஒற்றுமை ஏற்படும்.

- Advertisement -

உலகில் எந்த உறவுகள் நம்மை கைவிட்டாலும் நமது இறுதி காலம் வரை, நம் உடன் இருப்பது நமது வாழ்க்கைத் துணை எனப்படும் கணவன் அல்லது மனைவி எனும் சொந்தம் தான். எனினும் தற்காலத்தில் திருமணமான ஆண் – பெண் இருவரும் தங்களின் வீண் கௌரவம், வறட்டு பிடிவாதம், ஆணவம் போன்ற குணங்களால் தங்களின் வாழ்க்கை துணையிடம் தினந்தோறும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல், பிரிந்து வாழ்வது போன்ற நிலை ஏற்படுவதை நாம் காண்கிறோம்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் பெருகி சின்னதாக தொழில் நடத்துபவர்களை கூட பெரிய தொழில் அதிபராக மாற்றக் கூடிய சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

இப்படி தங்கள் வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கசப்பான மனப் பிணக்குகள் நீங்கி, மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தன்று அன்று தொடங்கி, அன்று காலை 6.00 மணி முதல் ஏழு மணி வரையிலான சுக்கிர ஓரை நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் செய்வதால் வாழ்க்கைத் துணையிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, மீண்டும் இருவரும் சேர்ந்து இனிமையான இல்லற வாழ்க்கை நடத்துகின்ற சூழல் உருவாகும்.

- Advertisement -