சிவன் கோவில்களில் அபிஷேக நீர் வரக்கூடிய கோமுக தீர்த்தத்திற்கு அருகே வடக்கே இடதுபுறத்தில் இருக்கும் தனி சன்னதியில் தியான நிலையில் அமர்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். இவர் சதா சர்வ காலமும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்பவர். கோவிலுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு வழிபடுவதும், கைகளை தட்டி கர ஒலியை எழுப்பி வழிபடுவதுமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தவறான நம்பிக்கைகளால் நாம் உடுத்தி இருக்கும் துணியில் இருந்து கொஞ்சம் நூலை எடுத்து சண்டிகேஸ்வரரின் மீது போட்டு வழிபடுவதும் உண்டு.சண்டிகேஸ்வரர் வழிபாடு முறை பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் காணலாம்.
சண்டிகேஸ்வரர் உண்மையில் புராணங்களின்படி பரிவார தெய்வம் கிடையாது. அவர் சிவனுக்கு இணை தெய்வமாகவும், முன்னொரு காலத்தில் பெருந்தெய்வமாகவும் இருந்து வந்தவர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இவர் விசார சருமன் என்கிற பசுக்களை மேய்க்கும் தொழில் செய்யும் 12 வயது சிறுவனாக இருந்த பொழுதே வேத ஞானம் பெற்றவர். சிவனின் மீது கொண்ட பக்தியால் தினமும் மணலில் சிவலிங்கத்தை செய்து பசுவை லிங்கத்திற்கு பால் கறக்க செய்வார்.
அப்படி ஒரு முறை விசாரசருமர் செய்து வைத்த மணல் லிங்கத்தின் மீது பசு பால் சுரப்பதை கண்ட அவரின் தந்தை எச்சத்தன் மிகுந்த கோபம் உற்றார். இப்படி பால் எல்லாம் மண்ணில் வீணாகப் போகிறதே என்று காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத விசாரசருமர் கையில் வைத்திருந்த குச்சியை எடுத்து தந்தையின் காலின் மீது வீசினார். உடனே அது மழுவாக மாறி தந்தையின் காலை காயப்படுத்தியது.
இவரின் பக்தியை கண்ட சிவபெருமான் நேரில் தோன்றி விசாரசருமனுக்கு சண்டிகேஸ்வர பதவியை கொடுத்தார். விசாரசருமர் கண்ணப்பருக்கு அடுத்து நாயன்மார்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். சிவனுடைய உணவு, ஆடை, ஆபரணங்கள், சொத்துக்கள் என்று அனைத்தையும் பாதுகாத்து நிர்வகிக்கும் ஒரு பதவியின் பெயர் சண்டிகேஸ்வர பதவி. இப்பதவியை விசாரசருமர் மட்டுமல்லாமல் பலரும் வெவ்வேறு யுகங்களில் வகித்ததாக புராணங்கள் கூறுகிறது. இதில் பிரம்ம தேவரும், சனீஸ்வரரும் கூட அடக்கம். பிரம்மதேவர் சண்டிகேஸ்வர பதவியின் போது சதுர்முக சண்டீஸ்வரர் ஆகவும், சனீஸ்வரர் யம சண்டிகேஸ்வரராகவும் இன்றளவும் பல கோயில்களில் காண முடியும்.
சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நான் எதையும் இங்கிருந்து எடுத்துப் போகவில்லை என்று கோவிலை வலம் வரும் பொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதியில் இரு கைகளையும் விரித்து சத்தம் எழுப்பாமல் தேய்த்து காண்பித்து வழிபட வேண்டும். அவர் தியான நிலையில் இருப்பதால் அமைதியாக ஆன்மீக பலமும், ஆத்ம பலமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அவருக்கு புது வஸ்திரம் சாற்ற வேண்டுமே தவிர, நம் உடம்பில் அணிந்து கொண்டிருக்கும் வஸ்திரத்திலிருந்து நூலை பிரித்து போடக்கூடாது, இது மகா பாவம் ஆகும். சண்டிகேஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சிவ அருள் உடனடியாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்கள், விபூதி முதற்கொண்டு எதையும் சண்டிகேஸ்வரர் அனுமதி இல்லாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது, எனவே அவரை வழிபட்டு பின்னர் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும் என்பது நியதி. சண்டிகேஸ்வரரை வழிபடும் பொழுது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேவையற்ற சிந்தனைகளுடன் இருக்கக் கூடாது. அவரை வலம் வந்து வணங்கக்கூடாது. அமைதியான முறையில் மேலே சொன்னபடி வழிபட்டால் நம் குலம் தழைத்தோங்கும். சிவன் சொத்துக்களை போலவே, நம் சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கும். ஆத்ம பலமும், ஆன்மீக பலமும் அதிகரிக்கும்.