சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக பிரதோஷ நாட்கள் திகழ்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷ நாள் வரக்கூடிய கிழமையை பொருத்து அந்த பிரதோஷத்தின் பலனும் அமையும். அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரதோஷமாக திகழ்வதுதான் சனி பிரதோஷம். இதை சனி மகா பிரதோஷம் என்று கூட கூறுவது உண்டு. 12 பிரதோஷங்கள் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதற்குரிய பலனை ஒரு சனி மகா பிரதோஷ நாளில் நாம் விரதம் இருப்பதன் மூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சனி மஹா பிரதோஷ நாளில் சிவபெருமானை எப்படி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சனி மகா பிரதோஷம் வழிபாடு
செல்வங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் மற்றும் குபேர பகவான். இவர்கள் இருவருக்கும் செல்வத்தை வாரி வழங்கியவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாமும் வழிபாடு செய்யும் பொழுது நமக்கும் செல்வ செழிப்பை சிவபெருமான் அருள்வார். அப்படி சிவபெருமான் நமக்கு செல்வ செழிப்பை தருவதற்கு சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானை நாம் இந்த முறையில் வழிபட வேண்டும்.
சனி மகா பிரதோஷம் என்பது மே மாதம் பத்தாம் தேதி வருகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தலைக்கு குளித்து சுத்தமான முறையில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய இடது கையின் உள்ளங்கையில் கட்டைவிரலில் இருந்து ஆள்காட்டி விரல் வரை இருக்கக்கூடிய இடத்தில் சிவபெருமானின் “சிவசிவ வசி வசி” என்னும் மந்திரத்தை எழுத வேண்டும். பிறகு உங்கள் கையில் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அதிகபட்சமாக எந்தத்தொகை இருக்கிறதோ அந்த தொகையை வைத்துக் கொள்ளுங்கள். 500 ரூபாய் 200 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதை உங்களுடைய கையில் வைத்து சிவபெருமானை வழிபாடு செய்து “ஓம் சிவ சிவ வசி வசி” என்னும் மந்திரத்தை 27 முறை கூறவேண்டும். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்து அப்படியே சிவபெருமானை படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அன்றைய தினம் விரதம் விரதம் இருக்க இயன்றவர்கள் விரதம் இருக்கலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் எளிமையான உணவுகளை உட்கொண்டு வழிபாடு செய்யலாம். மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரம் ஆன நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானின் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த ஆலயத்திலேயே அமர்ந்து காலையில் எந்த ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டு மந்திரத்தை கூறினோமோ அதே ரூபாய் நோட்டை மறுபடியும் கையில் வைத்துக்கொண்டு அதே மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே சிவபெருமானுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்து சிவபெருமானை முழுமனதோடு நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். பிறகு கையில் இருக்கக்கூடிய ரூபாய் நோட்டை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த முறையில் நாம் சனி மகா பிரதோஷ நாள் அன்று வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் செல்வ செழிப்பு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:வீடு கட்ட 6 மணி வழிபாடு
சிவபெருமானின் பரிபூரணமான அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு இந்த எளிமையான வழிபாடு முறையை முழுமனதோடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.