ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் சிம்பிளான மோர் குழம்பு ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த மோர் குழம்பு வைக்க நிறைய நேரம் நமக்கு எடுக்காது. அதே சமயம் இதன் ருசி நிஜமாகவே சூப்பரா இருக்குங்க. செய்யறதுக்கு இவ்வளவு சிம்பிளா இருக்கே, இது நல்லா இருக்குமா அப்படின்னு யாருமே யோசிக்காதீங்க. இது ஒரு அருமையான ருசி தரும் ரெசிபி. வாங்க கிராமத்து சுவையில், சுவையான கத்திரிக்காய் மோர் குழம்பு எப்படி வைப்பது என்று நாமும் இந்த பதிவிற்குள் சென்று தெரிந்து கொள்வோம்.
செய்முறை
150 கிராம் அளவு கத்திரிக்காய்களை எடுத்து நறுக்கிக் கொள்ளுங்கள். கட்டம் கட்டமாக ஓரளவு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வையுங்கள். கருத்து போகாது. இந்த கத்திரிக்காய் அப்படியே இருக்கட்டும். (தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு, கரைத்து அந்த உப்பு தண்ணீரில் கத்திரிக்காய் போடவும்.)
அடுத்து 1 1/2 கப் அளவு தயிர், கொஞ்சம் தண்ணீராக இருக்கும் தயிராகவும் எடுக்கலாம். கொஞ்சம் கட்டியாக இருக்கும் தயிரும் எடுக்கலாம். தயிர் சரியான புளிப்பில் இருக்க வேண்டும். அதை கட்டிகள் இல்லாமல் ஒரு மத்து வைத்து கடைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மோர் குழம்பு திக்காக வேண்டுமா, தண்ணியாக வேண்டுமா, அதற்கு ஏற்றது போல தயிரின் தன்மை இருக்க வேண்டும். இந்த தயிருக்கு தேவையான அளவு உப்பு போட்டு கடைந்து அப்படியே தனியாக வைத்து விடுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் கத்தரிக்காய்களை, தண்ணீரை மொத்தமும் வடித்து விட்டு எடுத்து இந்த எண்ணெயில் போட்டு, கத்திரிக்காய்க்கு தேவையான அளவு உப்பு தூவி, எண்ணெயிலேயே வதக்கி கத்தரிக்காயை வேக வைக்கவும். கத்திரிக்காய் வெந்து வந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 4 டேபிள் ஸ்பூன், இதில் போட்டு மீண்டும் வதக்குகள். மீதம் இருக்கும் கத்தரிக்காய் வெந்துவிடும். வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கி வந்துவிடும். இதை அப்படியே நன்றாக ஆற வைத்த பின்பு, எடுத்து கடைந்து வைத்திருக்கும் தயிரில் ஊற்றி விடவும்.
அடுத்து இதற்கு ஒரு சூப்பரான தாளிப்பு கொடுக்கப் போகின்றோம். அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் கிள்ளியது – 2, கருவாப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இதை தாளிக்க வேண்டும். இதற்கு பச்சை மிளகாய் வர மிளகாய் காரம் தான். உங்கள் ருசிக்கு ஏற்ப அதை கூடவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தாளிப்பை அப்படியே எடுத்து தயார் செய்து வைத்திருக்கும் மோர் கத்திரிக்காய் சேர்ந்த கலவையில் ஊற்றி விடவும்.
இதையும் படிக்கலாமே: 2 நிமிசத்துல தக்காளியே சேர்க்காம ரோட்டு கடை ஸ்டைலில் சூப்பரான இந்த கார சட்னியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா? இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தா எவ்வளவு செஞ்சாலும் பத்தாது.
தாளிப்பு கொட்டிய மோர் குழம்பை உடனடியாக ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொடுத்து மேலே கொத்தமல்லி தலையை தூவி, சுடச்சுட சாதத்தின் மேல் இதை ஊற்றி ஒரு காயில் செய்த கார கறி சைடிஷ் ஆக, வைத்து சாப்பிடுங்கள். தொட்டுக்கொள்ள ஒரு வடாம் இருந்தால் போதும். இதை விட அருமையான சைடு டிஷ் இந்த வெயில் காலத்துக்கு இருக்கவே முடியாதுங்க. அடுப்பில் மோரை வைத்து சூடு செய்யவே இல்லையே. இது ருசியாக இருக்குமா என்று யாரும் யோசிக்காதீங்க. இந்த குழம்புக்கு ருசியே அதுதான். முயற்சி செய்து ஒரு முறை ருசித்துப் பார்த்தால் அடிக்கடி இந்த ரெசிபி உங்கள் வீட்டில் பழக்கம் ஆகிவிடும்.