காய்கறிகள் மட்டும் வீட்டில் இருந்தால் போதும். ஃப்ரிட்ஜை திறந்தவுடன் கண்ணில் படும் காய்கறியை வைத்து, ஏதேனும் குழம்பு, பொரியல் என்று செய்திடலாம். ஆனால் காய்கறி இல்லாத நேரத்தில் என்ன குழம்பு வைப்பது என்ற யோசனை வந்து விடும். திடீரென வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என்ற குழப்பம் இருக்கும். இது போன்ற நேரங்களில் சற்றும் யோசிக்காமல் ஒரு கொத்து கொத்தமல்லி வைத்து இந்த சுவையான சாதத்தை செய்து பாருங்கள். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் கொத்தமல்லி சேர்த்து செய்வதால் உடலிற்க்கும் மிகவும் ஆரோக்கியமானதாகும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், முந்திரிபருப்பு – 10, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சாதம் – ஒரு கப், கருவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சேர்த்து, அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 10 முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, இவற்றுடன் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி கொண்டே இருக்க வேண்டும். பிறகு இவற்றுடன் வடித்து வைத்துள்ள ஒரு கப் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் இந்த கொத்தமல்லி சாதத்தை சுடச்சுட பரிமாறிக் கொடுத்து சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.