இன்னைக்கு லஞ்ச்சுக்கும் உருளைக்கிழங்கு வறுவலா? அப்படின்னு இனி யாரும் கேட்கமாட்டாங்க. தினம் தினம் இந்த உருளைக்கிழங்கு வறுவலை செய்து கொடுத்தாலும் விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

potato2
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் அடிக்கடி, உருளைக்கிழங்கை வறுத்து லஞ்ச் பாக்ஸில் கொடுக்கும் பழக்கம் இருக்கும். அப்படி இல்லை என்றால் மதிய உணவிற்கு வீட்டில் உருளைக்கிழங்கு வறுவல் ரசம். உருளைக்கிழங்கு வறுவல் சாம்பார். உருளைக்கிழங்கு வறுவல் தயிர் சாதம். என்ற காம்பினேஷன் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு தினம் தினம் உருளைக்கிழங்கு வறுவலை சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும். தினமும் செய்கின்ற உருளைக்கிழங்கு வறுவலை கொஞ்சம் வித்தியாசமாக செய்யப் போகின்றோம். அவ்வளவு தான். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் இந்த உருளைக்கிழங்கு மசாலாவுக்கு போட ஸ்பெஷலான பொடியை அரைக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 2, மிகச் சிறிய துண்டு பட்டை – 1, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடம் போல வாசம் வரும் வரை வறுத்து விட்டு நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 90% இந்த பொடி அரைபட்டால் போதும்.

- Advertisement -

அடுத்தபடியாக மீடியம் சைஸில் இருக்கும் 2 உருளைக்கிழங்குகளை எடுத்து தோல் சீவி ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை தண்ணீரை வடித்து இந்த எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கின் மேல் பாகம், எண்ணெயில் மொறு மொறுவென வறுபட வேண்டும். உருளைக்கிழங்கு குழைந்து போகக் கூடாது ஜாக்கிரதை. மொறுமொறுவென உருளைக்கிழங்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, இந்த உருளைக்கிழங்கை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். (அதாவது முக்கால் பாகம் உருளைக்கிழங்கு இந்த எண்ணெயில் வெந்தால் போதும்.)

மீண்டும் மற்றொரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், பச்சை மிளகாய் – 2 குறுக்கே வெட்டியது, வரமிளகாய் – 2 உடைத்தது, கறிவேப்பிலை – 2 கொத்து, இந்த பொருட்களை போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வரும்போது மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இடித்த பூண்டு பல் – 6, இந்த பொருட்களை போட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பூண்டு லேசாக சிவந்து வந்தவுடன் இன்னொரு கடாயில் வறுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, இந்த மசாலா பொருட்களோடு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். உருளைக்கிழங்கை ஒரு நிமிடம் போல கலந்து விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை உருளைக்கிழங்குடன் சேர்த்து மீண்டும் கிளற தொடங்க வேண்டும்.

ஆனால் பக்குவமாக கிளறி விடுங்கள். உருளைக்கிழங்கை உடைத்து குழைய வைத்து விடக்கூடாது. பார்ப்பதற்கு அப்படியே உதிரி உதிரியாக மொறுமொறுவென உருளைக்கிழங்கு வரும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மசாலா பொருட்களுடன் உருளைக்கிழங்கு ஒட்டி சிவந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, சுடச்சுட பரிமாறுங்கள். இந்த உருளைக்கிழங்கு வறுவலின் சுவை வேற லெவல்.

- Advertisement -